கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? லாக்டவுண் மட்டுமே தீர்வாகுமா? ‘வேல்ஸ்’ சிறப்புப் பார்வை!

0
25

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் விகிதம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த லாக்டவுண் மட்டுமே போதுமானதா? மத்திய அரசு, அதிகாரத்தை தன்னகத்தே குவிப்பது சரியா?   

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 உச்சத்தை எட்டியபோது, நிச்சயமற்ற ஒரு தன்மை நிலவியதை மறந்திருக்கமாட்டோம். சுகாதாரம் மாநிலப்பட்டியலில் இருந்தாலும், முடிவுகள் மையப்படுத்தப்பட்டன. மாநிலங்களின் ஆலோசனையோ, அனுமதியோ இல்லாமல் மத்திய அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட முடிவுகளை எடுத்தது. தற்போது 2-வது அலை வேகமெடுத்திருக்கும் நிலையில், முன்பு போல முடிவுகள் மையப்படுத்தப்படுமா? அல்லது மாநிலங்கள் வசம் விடப்படுமா? என்பதே பெரும்கேள்வியாக தொக்கி நிற்கிறது.

இரண்டாவது அலையின்(SARSCoV-2) பரவல் விகிதம், முதல் அலையை விட சற்றேறக்குறைய 1.7 மடங்கு வேகமாக இருக்கிறது. இரண்டாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், இது சரியா என்று மருத்துவ நிபுணர்கள் விவாதிக்கின்றனர். முதல் அலையைப் போலவே இதுவும் ஆபத்தானதுதான், கவனக்குறைவு கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளம் வயதினரை குறிவைத்துள்ள 2-வது அலையின் பெருந்தாக்கத்தில் இந்தியா இருக்கும் நிலையில், முழு ஊரடங்கு பற்றிய விவாதம் குறைந்துள்ளது.

ஏனென்றால் முந்தைய ஊரடங்கு அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பை பெருமளவு பறித்துக்கொண்ட நிலையில், நாட்டின் பொருளாதாரத்திலும் பெரிய ஓட்டையை போட்டுவிட்டது. எனவே, தற்போதைய 2-வது அலையில், பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, பெருந்தொற்று வீரியத்தை பொறுத்து மாநிலங்களே முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. எனவே மையமானதொரு முடிவு மாநிலங்களின் மீது திணிக்கப்பட வாய்ப்பில்லை. இதனடிப்படையில், தமிழ்நாடு போன்று, ஊரடங்கு மற்றும் தளர்வுகளின் படிநிலைகளை மாநிலங்களே முடிவெடுக்கலாம்.

கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என்றாலும், கோவிட்-19 தடுப்பூசி செலுத்துதலை, பெரும் இயக்கமாக நாடுமுழுவதும் முழுவீச்சில் முன்னெடுத்தால் மட்டுமே பரவலின் வீரியத்தை குறைப்பதுடன், உயிரிழப்புகளை தடுக்க இயலும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியும், பெரும்பாலானோர் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதை மறுக்கமுடியாது. இதன்மூலம், தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாக சென்றடையவில்லை என்பது புலப்படுகிறது. அதேபோல், கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் சிறந்தது எது என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் வலுவாக வலியுறுத்துகின்றன. தடுப்பூசி விவகாரத்தில் சொந்தமாக முடிவெடுக்க அனுமதிக்குமாறு மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கேட்கின்றன. இது சரியே என தோன்றுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் அடிப்படையில், மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துதலை துரிதப்படுத்துவார்கள்

இதன் அடிப்படையில், கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும். அடுத்ததாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் தருவதற்கான வழிமுறைகளை காண வேண்டும். இவைதவிர ஜான்சன் & ஜான்சன் போன்று ஒப்புதலுக்காக காத்திருக்கும் தடுப்புசிகளை ஆராய்ந்து தேவையான முடிவுகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

இதனூடே, சோதனைகளின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்க வேண்டும். கடந்த செப்டம்பர்அக்டோபர் மாதங்களில் தினசரி 1.5 மில்லியன் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அது, தற்போது, தினசரி 1.1 மில்லியனாக குறைந்துள்ளது.  தினசரி 2 மில்லியன் சோதனைகளை செய்யும் அளவுக்கு மத்திய சுகாராத்துறை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். முதல் அலையின்போது கிடைத்த படிப்பினையின் அடிப்படையில், அனைத்து கட்டுப்பாடுகளையும் தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு நினைக்கக் கூடாது. மக்கள் தொகை, பெருந்தொற்று பரவல் விகிதம், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்கள் தாங்களே சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள அனுமதிப்பது மட்டுமே, கோவிட்-19 2-வது அலையை எதிர்கொள்வதற்கான சரியான தீர்வாக இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry