தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை 1962 முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். செப்டம்பர்-05 ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களின் கல்வித் தொண்டுக்கான அங்கீகாரமாகும்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களால் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை பிரதமர் தனது இல்லத்துக்கு அழைத்து கலந்துரையாடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்வது நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 65 லட்சம் இருக்கும். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் சரி, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் சரி, ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்டவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்று வந்தார்கள். அது, படிப்படியாக 226 பேராகக் குறைந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 26 ஆசிரியர்களுக்குக் குறையாமல் தேசிய விருது வழங்கப்பட்டு வந்தது.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற காலம் தொட்டு, தேசிய விருது பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர்-05 ஆம் தேதி ஆசிரியர் தினத்தில் 65 லட்சம் ஆசிரியர்களில் 75 பேருக்கு மட்டுமே தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சுமார் மூன்று லட்சம் ஆசிரியர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வருபவர்கள்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எவரும் இல்லை. முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் தேசிய விருது பெறுவோர் எண்ணிக்கை 26 பேர். இவர்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை 16ஆக இருந்து வந்தது. உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 10 பேர் விருது பெறுவார்கள். எண்ணிக்கை குறைப்பால் சில மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் பெருமையினை பற்றி நெஞ்சைத் தொடும் அளவிற்குப் புகழாரம் சூட்டிப் பாராட்டி வரும் பிரதமர் மோடி, விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையினை குறைத்து வருவதேன்? மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும் அக்கறை காட்டுவதில்லை.
Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!
இந்த ஆண்டு 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து சிறப்பு செய்து கலந்துரையாடி மகிழ்ந்திருக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் எண்ணிக்கையினை குறைத்து வழங்கி வருவதற்கு அகில இந்திய அளவில் உள்ள ஆசிரியர் இயக்கங்களும், AIFETO அமைப்பும் பேரதிருப்தியினை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் தேசிய விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையினை குறைத்து வருவதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி அதிருப்தியினை தெரிவிப்பதுடன், காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையினை குறைக்காமல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தினார் என்பதை பெருமிதத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையினை தீவிரமாக எதிர்த்து வருகிற தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு, தேசிய விருது பெறுவோரின் எண்ணிக்கையினை குறைத்து வரும் பிரதமர் மோடி அரசின் மீது, நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது எதிர்ப்பு உணர்வுகள் பெருகுமே தவிர, குறைய வாய்ப்பில்லையே..! சுயபரிசோதனை செய்ய வேண்டியவர்கள் யார்..?
அதேநேரம், தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்படவே இல்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த ஆட்சி காலம் தொட்டு, அதிமுக ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் சரி, செப்டம்பர்-05 ஆசிரியர் தினத்தில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிற ஆசிரியர் தின விழாவில், 396 ஆசிரியர்களுக்கு துறைவாரியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை நேரில் வருகை தந்து விருதினை வழங்கி பெருமை சேர்த்தார். பிற மாநிலங்களில் ஆசிரியர் தினத்தில் முதலமைச்சர்கள் விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறார்கள். அதேபோல், நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தால் பெருமையினை சேர்க்கும் அல்லவா..!” இவ்வாறு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் தேசியச் செயலாளர் வா. அண்ணாமலை அறிக்கை வாயிலாக பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry