தொலைத்தொடர்பு, இணையசேவை துண்டிப்பு! காஸாவில் கோரத்தாண்டவம் ஆடும் இஸ்ரேல்! போர் நிறுத்த தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியா!

0
63
People uncontactable and all communication down as Israel intensifies bombing / GETTY IMAGE

காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை தொடங்கியுள்ளதாகவும், உலக நாடுகள் காஸாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பாலஸ்தீனம் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ள நிலையில், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் கொண்டுவந்த வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்திருந்தன. ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்’ எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

Also Read : தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! 2 வாரத் தாக்குதலில் காசாவில் 7000க்கும் அதிகமானோர் பலி!

மேலும், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தீர்மானத்துக்கு ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு, தீர்மானத்தில் ஓரிடத்தில் கூட ஹமாஸ் அமைப்பினரை ஊடுருவல்காரர்கள் என்று சுட்டிக்காட்டவில்லை என கண்டனம் தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த அழைப்பை நிராகரிப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல், “அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இனவேறுபாடுகளும் இல்லை. ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கிவைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்.

Israeli ground forces expanding Gaza operations / Getty Image

அதேவேளையில் மனிதாபிமான சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும். காசாவாசிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் பொருட்டு சர்வதேச சமூகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதற்கு இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வன்முறையை விடுத்து ஆக்கபூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஐ.நா. பொதுச் சபை, பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக அழுத்தமான செய்தியைக் கடத்தும் என்று நம்புகிறோம்” என்றார்.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும்,  ராணுவத்தினரையும் படுகொலை செய்தனர். இது தவிர 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

Also Read : மருந்துகள், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்கள்! கள நிலவரத்தை விளக்கும் விரிவான பதிவு!

இதற்கு பதிலடியாக காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், 22 நாட்களாக தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் தரைவழி தாக்குதல் என்று இஸ்ரேல் காஸா மீது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகி மக்கள் குடும்பம், குடும்பாக இடிபாடுகளில் புதையுண்டு வருகின்றனர். காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,000 பிஞ்சு குழந்தைகள் உட்பட 8 ஆயிரத்து 838 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

GAZA STRIP, GAZA – OCTOBER 28: Smoke rises and billows in different regions of Gaza as the Israeli army conducts the most intense air attacks on the 21st day in Gaza Strip, Gaza on October 28, 2023. Due to Israel cutting off electricity and not allowing fuel supplies, Gaza was plunged into darkness, and the sky was frequently illuminated by the bombs being dropped by Israeli aircraft. (Photo by Ali Jadallah/Anadolu via Getty Images)

தொடர் வான்வழி தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், காசாவில் உள்ள 23 லட்சம் மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். சுகாதார ஊழியர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை யாரையும் தொடர்புகொள்ள முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் பணியாளர்கள் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐநாவும், செஞ்சிலுவை சங்கமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உலக நாடுகளுக்கு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. X தளத்தில் பதிவிட்ட பாலஸ்தீன வெளியுறவுத்துறை, “காஸா மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், தொலைதொடர்பு, இணைய சேவை அத்தனையும் துண்டிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதி மக்கள் மீது ஒவ்வொரு நிமிடமும் இனி அழிப்பு மற்றும் படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

காஸாவில் இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்ததால், பொதுமக்களுக்கு உதவி வரும் மருத்துவக் குழுக்கள், களத்தில் உள்ள தங்கள் குழுக்களுடன் பேச முடியவில்லை என்று கூறுகின்றன. தொலைத்தொடர்பு மொத்தமாக முடக்கப்பட்டிருப்பது ‘மிகப்பெரும் அட்டூழியங்களை’ மறைக்க உதவக்கூடும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனிடையே, போர் விமானங்கள், டிரோன்களுடன் சேர்த்து, காசாவிற்குள் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்துவருகிறது. ஹமாஸ் குழுவைக் குறிவைத்துத் தனது தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடக்கு மற்றும் மத்திய காசாவில் ‘இஸ்ரேலின் தரை ஊடுருவலை எதிர்கொண்டுவருவதாக’ ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry