பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் மஞ்சள் அட்டைதாரர்களையும் புதுச்சேரி அரசு இணைக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சம்பத் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
2018-ல் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ’ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ உலகில் மிகப்பெரிய அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டம் ஆகும். இந்தியாவில் 50 கோடி பயனாளிகளை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு, ஒரு வருடத்துக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும். 13.01.2021 அன்று இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்க புதுச்சேரி அரசு அங்கீகரித்துள்ளது.
அதேநேரம், புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்கள் என்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வாழ்பவர்களாக வகைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர், தொழிலதிபர்கள், பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், உயர் வருவாய் பிரிவினர் ஆவர். ஆனால், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர பிரிவினை சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் மஞ்சள் அட்டைதாரர்களாக உள்ளனர் என்று திமுக எம்.எல்.ஏ. சம்பத் கூறுகிறார்.
அவர் மேலும் கூறும்போது“’ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ திட்டத்தில் சிவப்பு அட்டைதாரர்களை இணைத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி. மஞ்சள் அட்டைதாரர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர பிரிவை சார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.
தற்போதைய சூழலில் மஞ்சள் அட்டைதாரர்கள் அனைவருமே பொருளாதார ரீதியில் தன்னிறைவை எட்டியவர்களாக இல்லை. பெரும்பாலானோர் கஷ்டப்படுகின்றனர். எனவே, சிவப்பு அட்டைதாரர்களைப் போல, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களையும் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை சந்தித்து கடிதம் அளித்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry