மதுரையைச் சேர்ந்த கணவனை இழந்த கண்மணி என்ற பெண்மணி எழுதியதாக, சமூக ஊடகங்களில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. ‘மெல்லக் கொல்லும் மது அரக்கன்; கண்ணீருடன் குடும்பத் தலைவிகள்’ என்ற தலைப்பில், அன்புச் சகோதரி கண்மணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதும் கடிதம், என அந்தக் கடிதம் தொடங்குகிறது.
அதில், “பாலியல் தொல்லையால் பெண் பிள்ளைகள் தற்கொலை செய்வது வேதனை அளிப்பதாக தாங்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். அதேபோன்ற பெரிய கொடுமையை தமிழகப் பெண்கள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தெருவுக்குத் தெரு அரசு மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அது போதாது என்று மனமகிழ் மன்றம், ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் தனியாரும் பார் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பாண்டிச்சேரி போன்று தமிழகத்திலும் வீதி எங்கும் மழை வெள்ளம் போல் மது ஆறு பாய்ந்து ஓடுவது தாங்கள் அறியாதது அல்ல.
Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive
குடும்பத்திற்கு வருவாய் ஈட்டி தரும் கணவன்மார்கள் குடிநோயாளிகளாக மாற்றப்படுகின்றனர். கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு 50 வயதிலேயே அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மது குடிக்க பணம் கேட்டு, தாய், சகோதரி, மனைவி ஆகியோர் ஆண்களால் தாக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களின் குரல்களும் மவுனம் ஆக்கப்படுகின்றன. இளம் வயதிலேயே கணவனை இழக்கும் பெண்கள் கண்ணீருடன் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
திருமணத்திற்கு முன்பே குடிநோயாளிகளாக மாறும் இளைஞர்கள், குழந்தை பெறும் பாக்கியத்தை இழக்கின்றனர். குடித்துவிட்டு தாறுமாறாக வாகனம் ஓட்டும் இளைஞர்களால் சாலையில் செல்லும் அப்பாவி மக்களும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது.
அதுமட்டுமல்லாமல் கொலைக்கான சதித் திட்டங்கள் மதுக் கடையிலேயே தீட்டப்படுகின்றன. போதையிலேயே கொலைகளும் நடந்து முடிகின்றன. காவல் அதிகாரி பூமிநாதனை வெட்டிக்கொன்ற கயவர்கள் மது அருந்தி இருந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக நலன் கருதி திமுக நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் வி.கே. சசிகலா நடத்திவரும் மது ஆலைகளை மூட முன்வர வேண்டும். அதேபோல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நடத்தும் மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்.
தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்ற வேண்டாம். அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் போதும். சாராயக் கடையில் கிடைக்கும் வருமானத்தை நம்பி அரசு இயங்கலாமா? மதுவால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களின் அழு குரல்கள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் கண்மணி என்பவர் எழுதியதுதானா? அல்லது கண்மணி என்ற பெயரில் வேறு யாரேனும் எழுதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டதா? என்பதை உறுதிசெய்ய இயலவில்லை. ஆனாலும், மது உள்ளிட்ட போதை வஸ்துகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற அடிப்படையில், விழிப்புணர்வு பதிவாக இந்தக் கடிதத்தை வேல்ஸ் மீடியா செய்தியாக வெளியிடுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry