இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020-ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும் என முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய கல்விக்கொள்கைக்கு இசைவாக கார்பரேட் கல்விக்கொள்கையையே மாநில கல்விக்கொள்கையாக வகுக்கும்படி முதல்வரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் மிரட்டுவதே தனது முடிவுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “குழு தன் செயல்பாட்டை தொடங்கிய முதல் நாளிலிருந்தே கொள்கை உருவாக்கத்திற்கும், குழுவின் செயல்பாட்டிற்கும் என்னால் இயன்றவரை பங்களித்து வந்துள்ளேன். ஏன் தமிழ்நாட்டிற்கென தனிக்கொள்கை அவசியம் என்ற கருத்துரு உருவாக்குதல், ‘problem statement’ என்று அழைக்கப்படும் சிக்கல்கள் குறித்த கருத்துரு உருவாக்குதல், சர்வதேச அளவில் 113 வல்லுநர்கள் கொண்ட 13 துணைக்குழுக்களை உருவாக்கி விவாதித்தது என என் பணியை ஆக்கப்பூர்வமாக செய்தேன்.
இறுதியாக, நான் மேற்கொண்ட தேவையான ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும், 13 துணைக்குழுக்கள் செய்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் பெற்ற தரவுகளைக் கொண்டு ‘Initial Policy Inputs’ (232 பக்கங்கள் ) என்ற தலைப்பில் இடைக்கால அறிக்கையை எழுதி, உயர்நிலை குழுவிற்கு சமர்ப்பித்திருக்கிறேன். ஆயினும், ரகசியமாகவும், ஜனநாயமற்ற முறையிலும் குழுவின் தலைமை செயல்படுகிறது.
சில மூத்த IAS அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலை கல்விக் குழு தடுமாறிக்கொண்டிருக்கிறது. உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் எனது பணியைத் தொடர்ந்து செய்வதற்கும், பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்குவதற்கும் மென்மேலும் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
தேசியக்கொள்கை 2020-ன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020-ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். இந்நிலை நீடித்தால், தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்வி கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்.
அரசு ஆணை எண் 98, குழுவிற்கு பணித்துள்ள ஆய்வு வரையறைகளை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கத்துடன் உயர்நிலைக் குழு செயல்பட்ட போதும், நான் குழுவின் கொள்கை உருவாக்கும் நடைமுறையையும் தேவையான இலக்குகளை அடையும் திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பினைத் தொடர்ந்தபடியே இருந்தேன்.
எனினும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி, அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார். இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும், பாதுகாப்பற்ற நிலையையையும் கடந்த சில மாதங்களில் குழுத்தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட, அவை அனைத்தையும் எதிர்வினை துளியேனும் ஆற்றாமல் புறந்தள்ளும் போக்கைக் கடைப்பிடித்தார்.
தலைவர் இதுவரை இந்நிகழ்வு குறித்து என்னுடைய கருத்தைக் கேட்கவில்லை; இதில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் தரவில்லை. மொத்தமாக, அதிகார வர்க்கத்தின் தலையீடுகளிலிருந்தும், குழுவிற்குள் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் குழுவின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைப் பாதுகாக்க குழுவின் தலைமை தவறிவிட்டது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வரிடமும் கடிதம் சமர்ப்பித்தேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும், இதுவரை கிடைக்கப்பெறவில்லை. சூழலை சரிசெய்ய இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று, களைப்புற்று, உண்மையும் – ஜனநாயகமும் அற்ற குழுவின் சூழலும், அதிகாரவர்க்கத்தின் தலையீடுகளும், அச்சுறுத்தலும் என் செயல்களை முடக்க, பெரும்பாலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதன்மேலும் குழுவில் நீடிப்பது பொருளற்றது என்று உணர்கிறேன். எனவே கனத்த இதயத்துடன், இந்த உயர்மட்டக் குழுவில் இருந்து நான் விலகுகிறேன்…” என்று ஜவஹர் நேசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜவஹர் நேசன், “தேசிய கல்விக்கொள்கையின் பாதையிலும் தனியார்மய கார்பரேட் கல்விக்கொள்கையின் திசையிலும் மாநிலக் கல்விக்கொள்கையை கொண்டு செல்ல சில அதிகாரிகள் முனைப்புக் காட்டுகிறார்கள். எந்தச்சூழலிலும் நான் அரசைக் குற்றம் சொல்ல மாட்டேன். சில அதிகாரிகள் மிகமிக அதிகமாக தலையிட்டு குழு உறுப்பினர்களை மிரட்டுவதும், அதட்டுவதும், சில உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது. குழுவின் உறுப்பினராக அந்த தலையீடுகளைத் தடுக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது.
உதயச்சந்திரன் உள்பட எவரும் குழு உறுப்பினராக உள்ளே வந்து அமர்ந்து பேசலாம். விவாதிக்கலாம். அப்படியில்லாமல் வேறு பக்கமாக நுழைந்து கருத்தைத் திணிக்கிறார்கள். என்னை அழைத்து மிரட்டினார்கள். அதற்கெல்லாம் தலைவணங்காதபோது, ‘நாங்க எல்லோரும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகிறோம். நீங்கள் ஒருவர்தான் தடைக்கல்லாக இருக்கிறீர்கள்’ என்று உதயச்சந்திரன் வெளிப்படையாக சொன்னார்.
குழுவின் தலைவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாகவே தன் நிலையை இழந்துவிட்டார். அவர் எதையும் கட்டுப்படுத்தவில்லை. அதிகாரிகள் சொல்வதைச் செய்கிறார். நான் இந்தக்குழுவுக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளேன். அனைத்தும் ஆணங்களில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆணவங்களை சமர்ப்பித்திருக்கிறேன். ஆய்வுகள் செய்திருக்கிறேன். கடந்த நவம்பரில் நான் ஆய்வுசெய்து சமர்ப்பித்த ஆவணங்களை வழிகாட்டு ஆணவங்களாக குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
2023, ஜனவரிக்குப் பிறகு நிலை கட்டுக்குள் இல்லை. மத்திய கல்விக்கொள்கைக்கு உடன்பட்டு கார்பரேட் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணிதான் நடக்கிறது. குழுவில் என்ன விவாதிக்க வேண்டும் என்பதை குழு தீர்மானித்தால் பிரச்னையில்லை. சில அதிகாரிகள் தீர்மானிக்கிறார்கள். அதை தலைவர் ஏற்றுக்கொள்கிறார். குழுவில் ஜனநாயகமே இல்லாமல் போய்விட்டது. உதயச்சந்திரன் போன்றோர் ஒரு கருத்தைச் சொல்லும்போது மற்றவர்கள் அதைக் கேட்டுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். குழு இயங்கத் தொடங்கி 11 மாதங்கள் ஆகின்றன. முதல் நாளே, கல்விக்கொள்கையை எப்படி வகுப்பது ஷெட்யூல் போட்டு நான் மூன்று ஆவணங்கள் சமர்ப்பித்தேன். அதற்குப் பிறகும் ஏராளமான ட்ராப்ட்களை தந்திருக்கிறேன்.
11 மாதங்கள் எந்த விவாதமும் நடக்கவில்லை. இந்த மாதம் நான்காம் தேதிதான் முதல் விவாதமே நடந்தது. ஆனால் மே மாதத்திற்குள் 8 கூட்டங்களை நடத்தி கொள்கையை முடிவு செய்துவிட வேண்டும் என்று அவசரம் காட்டுகிறார்கள். 11 மாதங்கள் எதையுமே பேசாமல் இந்த ஒரு மாதத்தில் ஏன் முடிக்க அவசரப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.
அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்று கல்விக்கொள்கையை வகுப்பார்கள் என்று உதயச்சந்திரன் சொன்னபோது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கொள்கை இது. இவ்வளவு காலம் போய்விட்டது. இன்னும் ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டு தீர விவாதித்து கொள்கையை வகுக்கலாமே என்ற என் குரலுக்கு யாரும் காது கொடுக்கவில்லை. மற்ற உறுப்பினர்கள் ஓரிரு பக்கங்களில் தந்துள்ள பரிந்துரைகளை வைத்துக்கொண்டு இந்த மாதமே முடித்துவிட தலைவர் அவசரம் காட்டுகிறார்.
எல்லாப் பரிந்துரைகளையும் முன்வைத்து எல்லோரும் அமர்ந்து விவாதம் செய்தபிறகே கொள்கையை முடிவு செய்யவேண்டும் என்பது என் கருத்து. நான் இதுமாதிரியான விஷயங்களில் முரண்படுவதால் உதயச்சந்திரன் அவரது கேபினுக்கு என்னை அழைத்து மிரட்டினார். ‘நான் சொல்வதற்கு ஒத்துப்போகாவிட்டால் கமிட்டியை கலைத்துவிடுவேன். என்னை மீறி கல்விக்கொள்கை வராது. என் அதிகாரிகளும் உங்கள் கூட்டத்தில் பங்கேற்று கொள்கை முடிவுகளில் பங்களிப்பு செய்வார்கள்’ என்றார். அதற்கு மேல் நான் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்பதால் தான் விலகினேன்…” என்று ஜவஹர் நேசன் கூறினார்.
Recommended Video
கல்வி அமைச்சர் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்? முதல்வரின் செயலாளர் கையில் ரிமோட்! AIFETO Annamalai
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry