கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த விவகாரத்தால், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா அரசு தனது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டினர் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கனடா அறிவுறுத்தியது.
அதேபோல், கனடாவிலுள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி இந்தியாவும் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலில், “இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கேற்றார்போல, காலிஸ்தான் தனிநாடு ஆதரவுக் கட்சியின் சீக்கியர்களுக்கான நீதியின் (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், “இந்தோ-கனடிய இந்துகளே, நீங்கள் கனடா மற்றும் கனேடிய அரசியலமைப்பின் மீதான உங்கள் விசுவாசத்தை மறுத்துவிட்டீர்கள். உங்கள் இலக்கு இந்தியா என்றால், கனடாவைவிட்டு வெளியேறுங்கள்.” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது, கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே மோதல் கடுமையாக வெடித்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார். “இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். இந்தியாவைத் தூண்டிவிடுவது அல்லது பிரச்னையை அதிகரிப்பது எங்கள் எண்ணம் இல்லை. அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், சர்வதேச அமைப்பில் தேடப்படுபவராகவும் காலிஸ்தான் ஆதரவாளராகவும், தீவிரவாதியாகவும் கண்டறியப்படக்கூடிய சுக்தூல் சிங், கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி(Arindam Bagchi), “பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது” என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கில் எந்த தகவலையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி அந்நாட்டு அரசுக்கு ஆதாரம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் அந்நாட்டு அரசு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம், கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில், சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் கார் பார்க்கிங்கில் வைத்து நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது சீக்கியர் நிஜ்ஜார் ஆவார். பிரிட்டனில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கண்டா, ஜூன் மாதம் பர்மிங்காமில் மர்மமான முறையில் இறந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்ச்வார் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry