ஆ.ராசாவுக்கு பகிரங்க மிரட்டல்! கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! நிர்வாகிகள் மறியல்!

0
104

திமுக எம்பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் இந்து முன்னணி சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி

இதையடுத்து, பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல்நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாலாஜி உத்தம ராமசாமியை இன்று அதிகாலையில் கைது செய்தனர். அவர் மீது 153, 504, 505(1B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பீளமேடு காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து, அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். கைதைக் கண்டித்து பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Also Read : நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு; அரசு தலையிட முடியாது! தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். “தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி  அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதைத்  தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவைக் கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” எனப் பதிவு செய்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, “நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?.

இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்” என்றார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry