பண்டிகை நாட்கள் வந்துவிட்டால், தள்ளுபடி விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது, செல்போன் போன்ற மின்னணு பொருட்கள் ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் விலை குறைத்து விற்கப்படுகின்றன. தீபாவளி காலங்களில் போனஸ் போன்றவையும் கிடைக்கும். எனவே தீபாவளியை ஒட்டிய நாட்களில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தீபாவளிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், இவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

பண்டிகை காலத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அக்டோபர் 15ஆம் தேதி முடிந்த பண்டிகை கால விற்பனையின் முதல் வாரத்தில் மட்டும் ஆன்லைன் நிறுவனங்களின் மொத்த விற்பனை மதிப்பு 47,000 கோடி ரூபாய் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பிராண்டட் நிறுவனத்தின் ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, அதே பொருளை குறைந்த விலையில் வாங்கலாமா? ஆன்லைனில் வாங்குவது லாபமா, கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவது லாபமா? என்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறது. இத்தகைய சூழலில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக ஆன்லைனில் பொருட்களை வாங்க விரும்புவோரின் விளக்கம் இவ்வாறானதாகவே இருக்கும். “எளிதானது, நேரம், அலைச்சல் மிச்சமாகும், உட்கார்ந்த இடத்தில் நினைத்த பொருட்களை ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும், திருப்தி இல்லையென்றால் ரிட்டர்ன் போடலாம். நேரில் கடைக்குச் சென்று ஒருபொருளை பார்த்துவிட்டு வாங்காமல் வருவது சங்கடமான சூழலை ஏற்படுத்தும். ஆன்லைனில் இந்தப் பிரச்னை இல்லை என்றே கூறுகின்றனர்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது முடிந்தவரை அதனின் விலையை இரண்டு, மூன்று ஆன்லைன் தளங்களுக்குச் சென்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முடிந்தால் கடைகளுக்கும் சென்று விலையை சரிபார்ப்பது சிறந்தது. சில நேரங்களில் ஆன்லைன் நிறுவனங்களை விட, கடைகளில் அதிக தள்ளுபடியுடன் பொருட்கள் கிடைக்கின்றன. கடைகளுக்குச் சென்று பொருட்களை தொட்டு பார்த்து வாங்குவதை பலரும் விரும்புகின்றனர்.
ஆன்லைனில் விலை குறைவாக இருக்கிறது என்று ஏதோவொரு பொருளை வாங்காமல், அதற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள ரேட்டிங், அந்தப் பொளைப் பற்றி ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களின் ஃபீட்பேக் அல்லது ரிவ்யூ போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை கடைகளில் பொருட்களை வாங்க திட்டமிட்டால், பேரம் பேச முடியும். எக்ஸ்சேஞ்ச் எனப்படும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவதன் மூலமும் கணிசமான அளவு செலவை குறைக்க முடியும்.
ஒரு சிலர் தரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை விட, மலிவு விலைப் பொருட்களை வாங்குவதை விரும்புகின்றனர். விலை குறைவான சில மின்னணு தயாரிப்புகள், அதிக வசதியைக் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு பிரபலமானதொரு பிராண்ட் 40 இன்ச் டிவியை ரூ.30 ஆயிரத்துக்கு மேல் விற்கிறது என்றால், அதே அளவு, அதே வசதிகள், சிறப்பு அம்சங்களுடன் கூடிய சாதாரண பிராண்ட் டிவி ரூ.12 ஆயிரம், ரூ.13 ஆயிரத்துக்கு கிடைக்கும். எனவே விலை குறைந்த டிவியை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், விலை குறைந்தவை என்பதால் ஒருமுறை அதனை பயன்படுத்தி பார்க்கலாம் என்பதும் நுகர்வோரின் எண்ணமாக இருக்கிறது.
அதேநேரம், நீண்டகால பயன்பாட்டுக்கு பொருட்களை வாங்க நினைத்தால், விலை சற்று அதிகமாக இருந்தாலும் நல்ல பிராண்டை தேர்வு செய்வே சிறந்தது என்பதே வணிக மற்றும் நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது. நாட்கள் செல்லச் செல்ல மலிவு விலை பொருட்கள் ஒப்பீட்டளவில் அதன் செயல்திறனை இழக்கும். அடிக்கடி பழுதுபார்க்க வேண்டியிருக்கும் அல்லது வேறு புதிய பொருளை வாங்க வேண்டி வரும். இதற்கு செலவு ஆகும், மன உளைச்சலும் ஏற்படும். எனவே ஒரே முறை செலவு செய்து தரமான பொருளாக வாங்கலாம.
உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம் என்றாலும், அந்தப் பொருட்கள் உங்களுக்குக் கிடைக்க சில நேரங்களில் 4, 5 நாட்கள் வரை ஆகும். அதுவே, கடைகளுக்குச் சென்று வாங்கும்போது, உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும். ஆன்லைனில் வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களில் பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அந்த நிறுவனத்தையோ, குறிப்பிட்ட பொருளை தயாரித்த நிறுவனத்தையோ தொலைபேசியில் தொடர்புகொள்வது அவ்வளவு எளிதல்ல. கடைகளில் பொருட்களை வாங்கும்போது எதாவது பிரச்னை என்றால் கடைக்கே நேரில் சென்று அவற்றை சரி செய்துகொள்ள முடியும். அதேபோல், ஆன்லைனில் பொருள் வாங்கும்போது வாரன்ட்டி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றில் 2 ஸ்டார், 3 ஸ்டார், 5 ஸ்டார் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு இதனை கருத்தில்கொள்வது மிகவும் அவசியம். இந்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் (BEE) மூலம் இந்த ரேட்டிங் நிர்வகிக்கப்படுகின்றன. 2 ஸ்டார் உள்ள ஒரு பொருளை வாங்கும்போது விலை குறைவாகவே இருக்கும். அதேபொருளை 5 ஸ்டார் ரேட்டிங்கில் வாங்கும்போது விலை கூடுதலாக இருக்கும். அதிக ஸ்டார் உள்ள பொருட்களை வாங்கும்போது அந்த பொருட்கள் மிக குறைந்த அளவே ஆற்றலை அதாவது மின்சாரத்தை நுகரும். இதனால், மின்சார பயன்பாட்டை குறைக்க முடியும். நீண்ட காலத்திற்கு அவற்றை பயன்படுத்தலாம்.
வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், அவற்றின் அளவு. சிலர் தங்கள் வீட்டின் சிறிய ஹாலில் பெரிய டிவியாக வாங்கி வைத்திருப்பார்கள். பெரிய அளவில் ஃபிரிட்ஜ் போன்றவை வாங்கியிருப்பார்கள். இது இடத்தை அடைக்கும். எனவே, வீட்டின் அளவுக்கு ஏற்ப பொருட்களின் அளவுகளை முடிவு செய்வது அவசியம்.
அதேபோல், ஸ்மார்ட் டிவி, ஆன்ட்ராய்டு டிவி என மேம்பட்ட வசதிகளுடன் கூடிய டிவிக்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை வாங்குவார்கள். ஆனால், அதிலுள்ள வசதிகளை பயன்படுத்தாமலே இருப்பார்கள் அல்லது பயன்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். எனவே அதிக விலைகொடுத்து இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, நம் தேவையை சரியாகக் கணித்து அதற்கேற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
மேலும், உடலோடு பொருந்திப்போகிற பொருட்களை ஆன் லைனில் வாங்குவதை தவிர்க்கலாம். உதாரணமாக, ஆடைகள், காலணிகள் போன்றவற்றை ஆன் லைனில் வாங்குவது சரியானதாக இருக்காது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அளவு வேறுபடும், ஃபோட்டோவில் நம்மைக் கவர்ந்த கலர், நமது கைகளில் கிடைக்கும்போது இருக்காது. இப்படி பலப் பிரச்சனைகள் உள்ளன. எனவே பொருள்களைப் பொறுத்து, அவற்றை ஆன்லைனில் வாங்குவதா, நேரில் சென்று கடைகளில் வாங்குவதா? என்பதை மிகச்சரியாக தீர்மானிப்பதன் மூலமே, பணமும் மிச்சமாகும், நல்ல பொருளும் கிடைக்கும், மன உளைச்சலும் இருக்காது.
எல்லாப் பொருட்களையும் ஆன் லைனிலேயே வாங்குவதால், இளைய தலைமுறைக்கு நுகர்வுத்திறன் அதிகமானதாக தெரிந்தாலும், அவை மெச்சக்கூடியதாக இல்லை. பொருட்களை வீடு தேடி கொண்டுவந்து கொடுப்பதற்கான செலவும் உங்களைச் சார்ந்ததே. கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது, சிறிதளவு உடற்பயிற்சி கிடைக்கும், பொருட்களை பேரம் பேசி வாங்கும் திறன் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்பு மற்றும் சமூகப் புரிதலுடன், பலபேருடன் அளவளாவும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஒரு கடையில் தொடர்ந்து பொருள்கள் வாங்கும்போது, நமது நிதி நிலைமை வீழ்ந்தாலும், கடன் சொல்லி வீட்டுக்குத் தேவையானதை வாங்க முடியும். ஆன்லைனில் இது சாத்தியமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry