நீட் தேர்வை ஒழிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள், திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று திமுக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வாக்குறுதி அளித்தபடி நீட் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடி வருகின்றனர். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீட்டுக்கு எதிராக திமுகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்துகின்றனர். திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த 21-ம் தேதி சென்னையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கையெழுத்தை பதிவு செய்தார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கையெழுத்து இயக்கம் எந்த வகையிலும் உதவாது என நன்கு தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற திமுக நாடகத்தை நடத்தி வருகிறது. இது லோக்சபா தேர்தலுக்கான நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுகவில் ஒன்றை கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனக் கூறும் திமுக, 50 லட்சம் கையெழுத்துகளை வாங்க திண்டாடி வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா(வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா மகன்), தனது தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் மாநகராட்சி பள்ளியில், தனது ஆதரவாளர்கள் 10க்கும் அதிகமானோருடன் சென்று மாணவர்களிடம் கையெழுத்து பெற்றார்.
இதுதொடர்பான 17.30 நிமிட வீடியோ வைரலாகி உள்ளது. அதில் எம்.எல்.ஏ.வை வகுப்பு மாணவர்களிடம் அறிமுகம் செய்யும் பள்ளித் தலைமை ஆசிரியர், நீட் தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது, இது நமது மாநில பாடத்திட்டத்திலிருந்து வேறுபட்டது. நீட் தேர்வு இருந்தால் நீங்கள் மருத்துவராக முடியாது, நீட் இல்லையென்றால் அதிக மதிப்பெண் பெற்று அதன் மூலம் நீங்கள் மருத்துவராக முடியும்.” என்று பேசுகிறார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசும் பிரபாகர் ராஜா, திமுகவைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஏன் நீட் தேர்வுக்கு எதிரான ஆன்லைன் மனுவில் கையெழுத்திட வேண்டும் என்பதை விளக்குவதாக கூறுகிறார்.
மேலும், “அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வணிகவியல் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். தமிழ்நாட்டில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால், தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை. அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவ சீட் கிடைக்காததால் அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு சார்பாக, கட்சி சார்பாக கையெழுத்து வாங்குகிறோம்.
நீட் போன்று அடுத்ததாக பொறியியல் மற்றும் இளங்கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வந்துவிடும். தமிழர்களை முடக்கிவிட்டால் நாம மீண்டும் குலத்தொழில் செய்யப் போய்விடுவோம் என திட்டமிட்டுகிறார்கள். அப்பா தொழிலை மகன் செய்துவந்தார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால்தான் நாம் பள்ளிக்கு வந்துள்ளோம்.
நீட் தேர்வு ஆர்.எஸ்.எஸ். கொள்கை. அரசு சார்பாக நீட் கோச்சிங் சென்டர் வைத்தால், நீட் தேர்வை ஏற்றுக்கொண்டது போலாகிவிடும். கண்டிப்பாக வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும். நமக்கு வேண்டப்பட்ட ஆட்சி அமைந்தால் 100% நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.” என்று பிரபாகர் ராஜா பேசியுள்ளார். பேசி முடித்தவுடன் எம.எல்.ஏ.வும் உடன் வந்தவர்களும் தங்களது மொபைல் ஃபோன்களிலும் மாணவர்களை கையெழுத்திட நிர்ப்பந்திக்கிறார்கள்.
Shameful. #DMK Virugambakkam MLA @PrabhakarRaja88 forcefully obtains Anti-#NEET signatures from #Chennai Govt. School students while School HM is fully complicit. @Udhaystalin should be ashamed to pollute minds of children for your petty, cheap politics!pic.twitter.com/ChYDWPclir
— Dr.SG Suryah (@SuryahSG) October 25, 2023
நீட் விலக்கு சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தும், பொய் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்பதாக காட்டிக்கொள்ளும் வகையில், பள்ளி வகுப்பறையில் நீட் தேர்வு விலக்கு குறித்து பிரபாகர் ராஜா பொய்ப் பிரச்சாரம் செய்து கட்டாய கையெழுத்து பெரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பள்ளிக்கூடமா அல்லது அரசியல் மேடையா எனவும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீட்டை வைத்து திமுக நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் செய்து வருவதாகவும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.
இதுபற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பலரும், அரசியல் கட்சிகள் எப்படி பள்ளி வகுப்பறைகளில் தன்னிச்சையாக நுழைய முடியும்? மாணவர்களை (பெரும்பாலும் சிறார்களை) ஒரு விஷயத்திற்கு பதிவு செய்யுமாறு அவர்கள் எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்? மாணவர்களுடன் தொடர்பு கொள்ள இவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, “எம்எல்ஏவின் செயல்பாடு தவறானதாகும். நீட் தேர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கு முழுமையான புரிதல் இருக்காது. அவர்களிடம் வகுப்பறைக்கே நேரடியாக சென்று கையெழுத்து பெறுவது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மேற்கொண்டிருப்பது அரசியல் சார்ந்த செயல்பாடாகும். இதை கல்விசார்ந்த இடங்களில் புகுத்தக்கூடாது.
அவர்கள் விரும்பினால் வகுப்புகள் முடிந்த பின்பு பேருந்து நிலையம், பூங்காங்கள் போன்ற வெளியிடங்களில் மாணவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். ஆட்சியில் இருப்பதால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்து திமுக அரசியல் செய்வதாகவும், கட்சி நிகழ்வை திமுக வகுப்பறைக்கு கொண்டு சென்றது தவறு என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடப்பதும், உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்ற உண்மையையும் மறைக்கும் பணியில் திமுகவும், தமிழக பெரு ஊடகங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்து, பல நூறு மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வருபவர் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. அவரது வழியில், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த முயற்சிக்கலாம். அதைவிடுத்து, அரசுப் பள்ளி வகுப்பறைக்கு சென்று, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என ஒரு எம்.எல்.ஏ. பேசும்போது, மாணவர்கள் மத்தியில் அது எந்தவிதமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்க வேண்டாமா?
அவரது பேச்சு மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் ஆகாதா? வகுப்பறைக்கு சென்று கையெழுத்துப் பெறுவதே தவறு எனும்போது, அவர்கள் மத்தியில் அரசியல் பிரச்சாரம் செய்வதை சட்டம் அனுமதிக்கறதா? பள்ளியின் தலைமை ஆசிரியரே, நீட் இருந்தால் உங்களால் மருத்துவராக முடியாது என மாணவர்களின் தன்நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் பேசுகிறார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசியலுக்காக பள்ளி மாணவர்களை திமுக பயன்படுத்த தொடங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry