நிதிச் சிக்கலில் ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சி! ஊதியப் பிரச்சனை குறித்து நிர்வாகம் விளக்கம்!

0
744

தமிழகத்தின் முன்னணி காட்சி ஊடகமான ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் 2 மாதங்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி கடந்த 4 மாதத்திற்கு மேலாக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் தொடர்ந்து தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

Also Read : தாது மணல் தொழிலில் அதானி கால்பதிக்க சலுகை! கனிம அகழ்வுக்கான தடையை நீக்குகிறது மோடி அரசு?

இது குறித்து 2 மாதங்களுக்கு முன்னர், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் சங்கம் சார்பாக முறையிடப்பட்டது. அதற்கு, ஒரு மாதத்தில் ஊதியப் பிரச்சனை தீர்க்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் இதுவரை அந்த பிரச்னை முழுமையாக தீர்க்கப்படவில்லை. குறிப்பாக, ஆகஸ்ட் மாத ஊதியம் பெரும்பாலான ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது அக்டோபர் முதல் வாரம் முடிவடையவுள்ள சூழ்நிலையில், செப்டம்பர் மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.

நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று நியூஸ்7 தமிழ் பணியாளர்கள் சம்பளம் தாமதமாக வழங்குவதை இதுவரை பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் நீடிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரிய சேமிப்பு எதுவும் இல்லாமல், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வேலை செய்துவரும் பணியாளர்கள் வீட்டு வாடகை மற்றும் மாதத்தவணை செலுத்த முடியாமலும், அன்றாட செலவுக்கே பணமில்லாமலும் அவதியுற்று வருகின்றனர். தற்போது பண்டிகை காலம் நெருங்கிவரும் நேரத்தில் ஊதியம் இல்லாமல் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னையை சொல்லி விளங்க வைக்க முடியாது.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

பணியாளர்களுக்கு அவர்கள் செய்த பணிக்கான ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் சட்டப்பூர்வமான கடமையாகும். ஆனால் அந்த கடமையில் இருந்து விலகி பொறுப்பற்ற முறையில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் செயல்படுவதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டிக்கிறது.

பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனை தலை தூக்கிய போதே இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்டபோது, ஊதியப் பிரச்னையை விரைவில் தீர்க்கப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை பணியாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இல்லையென்றால் சங்கம் சார்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என நிர்வாகத் தரப்பில் சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கிறது. நிதி நிர்வாகத்தில் தொலைக்காட்சி உரிமையாளர் தலையிடாததே பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்தபோது, நிதி விவகாரத்தை தொலைக்காட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் உரிமையாளர் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.

அந்த நிர்வாகி நிதி விவகாரத்தை முழுமையாகக் கையாளும் நிலையில், அதை உரிமையாளர் கண்காணிப்பதில்லை என்று ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஊதியம் வழங்குவதில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டும் அந்த நிர்வாகி மீது பல்வேறு புகார்கள் இருந்தும் உரிமையாளர் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு இறுதியிலும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை இருந்தது. அப்போது உரிமையாளர்களுக்குள் இருந்த பாகப்பிரிவினை பிரச்சனை காரணமாக ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போதோ நிர்வாகக் குளறுபடியால் மீண்டும் ஊதியப் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. நிதி நெருக்கடியால் தொலைக்காட்சி மூடப்பட்டுவிடுமோ என்ற ஐயமும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உரிமையாளர் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி தியாகச் செம்மல் வேல்ஸ் மீடியாவிடம் பேசினார். அப்போது, “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முழுமையாக நிர்வாகத்தை கவனித்து வருகிறேன். நிதிச்சிக்கல் என்பது ஓரளவு உண்மைதான். ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குத்தான் ஊதியம் வழங்குகிறோம்.

விளம்பரதாரர்களிடம் இருந்து வரும் தொகை அடிப்படையில், ஊதிய படிநிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அதிக ஊதியம் பெறும் 23 பேருக்கு மட்டுமே நிலுவை இருக்கிறது. செப்டம்பர் மாத ஊதியத்தை விரைவில் வழங்க உள்ளோம்.

இதையெல்லாம் தாண்டி, நிதிச் சிக்கல் இருந்தாலும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இன்க்ரிமென்ட் வழங்குகிறோம். அதேபோல் போனசும் வழங்கி வருகிறோம். நிதிச்சுமையை காரணம் காட்டி இதுவரையில் எந்தவொரு ஊழியரை பணி நீக்கம் செய்யவில்லை.” இவ்வாறு தியாகச் செம்மல் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry