கொரோனா தடுப்பூசி போடாமலேயே சர்டிபிகேட்! முகாம்களில் நடக்கும் உச்சபட்ச குளறுபடிகள்! ‘வேல்ஸ்’ அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
7

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே, சான்றிதழ் கிடைக்கும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முகாம்களில் நடக்கும் குளறுபடிகளை அரசு உடனடியாக களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது

இந்தியாவில் கொரோனா பலியை தடுக்க, நடப்பாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான  சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசின் கணக்குப்படி, இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய வயதினர் எண்ணிக்கை 107 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரத்து 996 ஆகும். 28.10.2021 நிலவரப்படி, இவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 72 கோடியே 11 லட்சத்து 49 ஆயிரத்து 84 பேர். இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 30 கோடியே 97 லட்சத்து 995 பேராகும். நாட்டின் மக்கள் தொகை அடிப்படையிலான (சுமார் 139 கோடி) விகிதாசாரப்படி, 52.3 சதவிகிதம் பேர் முதல் தவணையும், 22.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.  கல்லூரிகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என்பதால், 18 வயது முதல் 23 வயதுடையோரில் 25% பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரங்கள் பற்றி மத்திய சுகாதாரத்துறை இணையதள தரவுகளின்படி, 4 கோடியே 7 லட்சத்து 11 ஆயிரத்து 31 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரத்து 973 பேர் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.88 கோடியாகும். 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விகிதத்தில் தமிழ்நாடு 10-வது இடத்தில் இருக்கிறது.

Also Read :- கர்நாடகாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவுமா?

தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. குறிப்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூடுதல் அக்கறை செலுத்துவதை காணமுடிகிறது. ஆனால், தடுப்பூசி இயக்கத்தை முழுவீச்சாக முன்னெடுப்பதில் கீழ்மட்ட அதிகாரிகள் மத்தியில் மெத்தனம் காணப்பபடுகிறது. இதனால், தடுப்பூசி செலுத்துவதில் பல குளறுபடிகள் நடக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இங்கு, இணையத்துடன் கூடிய கணினி வசதி செய்து கொடுக்கப்படவில்லை அல்லது அதற்கான சாத்தியம் இல்லை. எனவே, தடுப்பூசி செலுத்த வருவோரிடம், பெயர், ஆதார் எண், மொபைல் எண், முதல் டோஸா, இரண்டாவது டோஸா, என்ன தடுப்பூசி போன்ற விவரங்கள் ரிஜிஸ்தரில் குறித்துக்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி செலுத்த வரும் நபரே, எந்த நிறுவன தடுப்பூசி, எத்தனையாவது டோஸ் என்பதை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

தடுப்பூசி செலுத்தாமல் வழங்கப்பட்ட சான்றிதழ்

இங்குதான் முறைகேடுகள் நடக்கிறது. முகாமில், நன்கு அறிந்த ஊழியர் இருந்தால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே, செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. அதேபோல், பெரும்பாலான முகாம்களில், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோரிடம்,  முதல் தவணை செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கேட்டுப்பெறுவதில்லை. இதன்காரணமாக, தடுப்பூசி செலுத்த வரும் நபர், எத்தனைவாயது டோஸ் என்கிறாரோ, அதை ரிஜிஸ்தரில் குறித்துக்கொண்டு ஊசி செலுத்தப்படுகிறது. முதல் தவணையில் எந்த நிறுவன தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதையும் வரும் நபரே சொல்ல வேண்டும். தவறுதலாக மாற்றிச் சொன்னாலோ, எத்தனையாவது டோஸ் என்பதை மாற்றிச் சொன்னாலோ, அதை சரிபார்ப்பதற்கான வசதி முகாம்களில் இல்லை.

இந்த முறைகேடுக்கு சுகாதாரத்துறையை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சான்றிதழ் பெறுவதாலோ, முகாம்களில் பொய் கூறி இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதாலோ, அரசுக்கு எந்த நட்டமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மாறாக, அவர்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வதுடன், சமூகத்துக்கும் கேடாக உருமாறுகிறார்கள். இதுபோன்ற நபர்களும், அவர்களுடைய தவறுகளுக்கு துணைபோகும் சுகாதாரத்துறை ஊழியர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் செய்யும் தவறுகளால், தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை மற்றும் விகிதம் கேள்விக்கு உள்ளாகிறது.

இதுபோன்ற முறைகேடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கிறதா? அல்லது மற்ற மாநிலங்களிலும் நடக்கிறதா? என்பதை அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் உடனடியாக கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்கும் வழிகளையும் உடனடியாக ஆராய வேண்டும். ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்காமல் அனைவருக்கும் தடுப்பூசி என்ற மத்திய, மாநில அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry