பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க மார்ச் 17 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை கட்சியிலிருந்து நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Also Read : அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது.
விசாரணையின்போது, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பேரவைக் கூட்டத்தில்கூட பங்கேற்க முடியாத நிலை உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகக்கூற எந்த ஆதாரமும் இல்லை. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் நியமனம், கட்சி விதிகளுக்கு புறம்பானது. எனவே, எதிர்கட்சியிடம் விளக்கம் கேட்காமல், பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு, எதிர்மனுதாரரிடம் விளக்கம் கேட்காமல் எப்படி உத்தரவு போட முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியின் வாதத்தை கேட்காமல் பொதுக் குழு தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
Also Read : மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!
அதிமுக, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர் மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க வரும் 17 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, அதிமுக பொதுக் குழு தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry