அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பனுடன் வெள்ளிக்கிழமை(10.11.2023) இரவு அலைப்பேசியில் மனம் திறந்து உரையாடிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்குத் தடையாணை பெறவும்; ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET தேர்ச்சி தேவை என்ற கொள்கை முடிவில் பள்ளிக் கல்வித்துறை தலையிடவில்லை என்றும்; அதே நேரத்தில் பதவி உயர்வில் செல்ல பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் சீனியாரிட்டி முறையே தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது;
Also Read : பலரும் அறியாத முருகனின் மகிமைகள்! கைமேல் பலன்கொடுக்கும் கந்தசஷ்டி விரதம்! Kandha Sashti Viratham!
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். பள்ளிக் கல்வித்துறை செயலாளராக ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப. பொறுப்பெற்ற பிறகு, தனி அக்கறை கொண்டு, டெல்லியில் அவருக்குள்ள அறிமுகத்தினைப் பயன்படுத்தி, பணிமூப்பின்படி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தீர்ப்பினைப் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரிதும் முயற்சி எடுத்து வருவது கண்டு பெருமிதம் கொள்கிறோம். வரவேற்றுப் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு தேவையான அரசாணைகளை வழங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருவது கண்டு வரவேற்றுப் பாராட்டுகிறோம். பள்ளிக் கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாட அரசு வழக்கறிஞர்களுடன் வாதாடும் தனித்திறனுள்ள வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்து இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால், உடனடியாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதவி உயர்வு வழங்குவதற்குத் தயாராக உள்ளார்கள். தீர்ப்பினைப் பெற்று உடனடியாக பதவி உயர்வு முன்னுரிமைப்படி கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்கிடவும், பள்ளிக்கல்வித்துறை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தமில்லாத வழக்குகள்..! சம்மந்தமில்லாத தீர்ப்புகள்..!
மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு இடைநிலை ஆசிரியர்களுக்குள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவருக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று TET தேர்ச்சிப் பெற்றவர் வழக்கு தொடுத்தார். அதே பள்ளியில் பணிமூப்பில் (சீனியாரிட்டி) உள்ள இடைநிலை ஆசிரியர், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி தேவையில்லை… பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பணிமூப்பு ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.
தொடக்கக் கல்வித்துறையில் உள்ள எந்த இடைநிலை ஆசிரியரும் இந்த வழக்கு விசாரணையில் வழக்கறிஞரைக் கொண்டு வழக்குத் தொடுத்து வாதாட முன்வராமல் ஒதுங்கிக் கொண்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியும், 2 நீதிபதிகளைக் கொண்ட அமர்வும், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததோடு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என அனைத்துப் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி விட்டார்கள்.
இந்தத் தீர்ப்பினால் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளாக பல பள்ளிகள் இயங்கி வருவதையும், பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு பெரிதும் பாதிப்படைந்து வருகிறது என்பதையும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பெரிதும் உணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர்களைப் பாதுகாக்கும் துறையாக பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மலர்ந்து வருவது கண்டு பெருமிதம் கொள்கிறோம். வழக்கு விசாரணைக்கு வரும் 20ஆம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்..!” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry