15 மாநிலங்களில் அதிரடி சோதனை! PFI அமைப்பினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது!

0
119

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நடவடிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலர், தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Also Read : இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிப்பு! அமெரிக்க நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயங்கங்களில் இணையும் படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பிஎஃப்ஐ-யின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகமான கைது நடவடிக்கை கேரளாவில்தான் நடந்துள்ளது. அங்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தலா 20 பேர், தமிழ்நாட்டில் 10 பேர், அஸ்ஸாமில் 9 பேர், உத்தரப் பிரதேசத்தில் 8 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 5 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read : பூமி பூஜை செங்கற்களை எட்டி உதைத்த தருமபுரி திமுக எம்.பி.! கோபமடைந்த கட்சியினர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு!

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் உள்ளிட்ட பிற நிர்வாகிகளின் அலுவலகங்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பிஎஃப்ஐ தலைவர் ஓஎம்ஏ சலாம், மாநிலத்தலைவர் சிபி மொகம்மது பஷீர், தேசிய செயலாளர் நஸ்ருதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா ஆகிய நான்குபேர் விரசாணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திண்டுக்கல், கடலூர், கோவை, ராமநாதபுரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைமை அலுவலத்தில் சோதனை நடைபெற்றது.

Also Read : விவசாயிகள் போராட்டம், அக்னிபத் போராட்டங்களில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்! உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

கோவையில் பிஎஃப்ஐ நிர்வாகி இஸ்மாயிலின் வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. அதேபோல், கடலூரில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வந்த பிஎஃப்ஐ-ன் மாவட்டத் தலைவர் பையாஸ் அகமது வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சோதனை, கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்கள் திண்டுக்கல் அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் மறியல் போராட்டம் நடந்தது. கேரளாவின் கன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர்.

Also Read : இந்தியாவில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை! மோடி அரசின் கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இன்று நடந்த சோதனை பெரும்பாலும் தென்மாநிலங்களிலேயே அதிகமாக நடந்துள்ளது.
சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, ‘எதிர்ப்பாளர்களின் குரலை நசுக்க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகின்றது’ என குற்றம்சாட்டி உள்ளது.