ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நீடிக்கும் மழை! சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்! மக்கள் அவதி!

0
99

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே இது நாளை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ.11) முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கு வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read : 35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

ராணிப்பேட்டை, திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவியை கோரிய நிலையில், இந்த 4 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், தி. நகர், தாம்பரம், பல்லாவரம் எனச் சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குளம்போல தேங்கி நிற்கும் தண்ணீரால் சென்னை மக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, வண்டலூர், நாவலூர்,  எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, ஆவடி, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு பணிக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்டதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்த  நிலையில், மழையால் இந்த வருடமும் அதே நிலையே நீடிக்கிறது. சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கும் நீரால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

Also Read : வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!

கனமழையை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 169 முகாம்கள் உள்பட மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு100 கனஅடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry