எனது அப்பா சந்தானமும், அம்மா அய்யம்மாளும் எனக்காகவும், என் உடன் பிறந்தவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தனர். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கனவாக இருந்திருக்க வேண்டும்.
என் அப்பாவின் பெற்றோருக்கும், என் அம்மாவின் பெற்றோருக்கும் இது பொருந்தும். படிநிலையில் அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் அதைத்தான் நினைத்திருக்கக்கூடும். இதை வாசிக்கின்ற உங்களுடைய பெற்றோருக்கும் இதிலிருந்து விலக்கில்லை.
பொதுச்சமூகம் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து, சுபிட்சமாக வாழ வேண்டும் என்று லட்சத்தில் ஒருவர் நினைத்திருக்க கூடும். இன்று அது கோடியில் ஒன்றாக இருக்கிறது. நம் வளங்களை கொள்ளையடிக்க மட்டுமே வந்த பிரிட்டிஷ் கொடுங்கூட்டத்தில், ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக வாய்த்ததை வரலாறு Exemption என்று சொல்கிறது.
அந்த விதிவிலக்கில் ஒன்றான மாமனிதர் கர்னல் பென்னிகுயிக், காலம் தமிழ் நிலத்திற்கு கொடுத்த அற்புதமான கொடை என்றே நினைக்கிறேன். தமிழ் வரலாற்றிற்கு, இலக்கிய, இலக்கண, பங்களிப்புகளை அர்ப்பணிப்புடன் செய்து தந்த ஜி.யூ.போப், கால்டுவெல் வரிசையில், என்னால் கர்னல் பென்னிகுயிக்கை அவ்வளவு எளிதில் வைத்து விட முடியாது.
கால்டுவெல்லையும்,போப்பையும் இன்றைய இளைய தலைமுறை, அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மறந்தும் கூட கர்னலின் மீது கைவைக்க முடியவில்லை. காரணம், முன்னவர்கள் வரலாற்றுப் பெருமைக்காக மாவு இடித்தவர்கள். கர்னல் பென்னிகுயிக்கோ ஏதோ ஒரு பெருங்கூட்டத்தின் வாழ்வியல் வளமைகளுக்காகத் தன்னை வருத்திக்கொண்டவர்.
இந்த பூமிப்பந்து உள்ளவரை, இங்கு அவரால் வாழ்வு பெற்ற ஏதோ ஒரு இனந்தெரியாத உயிர்கூட அவர் பெயரை கண்டிப்பாக உச்சரித்துக்கொண்டே இருக்கும். சுருங்கச் சொன்னால் Periyar TIGER Reserve முதல் Bay of Bengal வரையுள்ள இந்தச் சமவெளி நிலத்தில் வாழும், கரையான் முதல் கடைக்கோடி மனிதன் வரை அத்தனை ஜீவராசிகளுக்கும் அவர்தான் தேவதூதன்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற தமிழ் மூதுரை கூட அவருக்குப் பொருந்தவில்லை. ஊர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்த அந்த மாமனிதனின் பிள்ளைகள் வாழவில்லை என்கிறது வரலாறு. அவரைப் படிக்கப் படிக்க, அவரை நினைக்க நினைக்க இங்குள்ள அரசியல்வாதிகளின் மேல் அத்தனை வெறுப்பு மேலிடுகிறது.
மாத ஊதியம் பெற்ற அரசு ஊழியருக்கு இருந்த சேவை மனப்பான்மையுடன் கூடிய நல்லெண்ணம், சேவை செய்ய மட்டுமே பிறப்பெடுத்திருக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போனதேன் பொது ஜனமே? சேவை என்றாலே கொள்ளையடிப்பது என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், நமக்குத் தேவை ஞானிகளும், ரிஷிகளுமல்ல, பென்னிகுயிக்குகளே..!
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், பஞ்சாப் மாகாணம் ஜாலியன்வாலாபாக்கிலே ஆயிரக்கணக்கான அப்பாவிகளை சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரும், அதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால், மேற்கு தொடர்ச்சி மலையில் புறப்படும் ஒரு ஆற்றை, அறிவியல் புலப்பட்டிராத ஒரு காலத்தில், கிழக்கு நோக்கி திருப்பி ஒரு அணையைக் கட்டி, 125 ஆண்டுகளாக பல கோடி மக்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கும் கர்னல் பென்னிகுயிக்கும் ஒரு நாட்டுக்காரர்கள்தான் என்பதுதான் காலம் வரைந்த கோலம்.
ராணுவ ஜெனரலான டயரிடம் இல்லாத நெஞ்சுறுதியை, நாம் இந்த பொறியியாளரிடத்திலே காணமுடியும். அந்த நெஞ்சுரம் மட்டும் கர்னல் பென்னிகுயிக்கிற்கு இல்லாது போயிருந்தால், அழகமாநகரியும், அலவாக்கோட்டையும் தண்ணீர் கண்டிருக்குமா? ஜாதிக் கட்டுமானங்கள் நிறைந்த தென் மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக பெரியாறு பாயும் மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அனைத்து ஜாதியும் கொண்டாடும் அவதாரமாக இன்றைக்கு நாம் கர்னல் பென்னிகுயிக்கை பார்க்கிறோம்.
இந்தப் பார்வை ஐயாவின் நீரியல் நிபுணத்துவத்திற்கானது மட்டுமல்ல, அவரது நெஞ்சுரத்திற்காகனதும்தான். ஐந்து மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த மாமனிதனை பென்னி என்று ஒருமையில் விழிக்க எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை சிலருக்கு..!
அவர் வணங்கவும்படுகிறார். சில வியாபாரிகளின் வசூல் வேட்டைக்கும் பயன்படுகிறார். காலம் அவரை கருவறையிலும் அமர்த்தலாம். எது எப்படியோ அடுத்த பத்தாண்டுகளில் பெரியாறு தண்ணீரில் நடைபயிலும் அத்தனை ஊர்களிலும் அவரது திருவுருவச் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கலாம், நிற்க வேண்டும். இந்த வார வேண்டுகோள்… போடியிலிருந்து சென்னை செல்லும் தொடர் வண்டிக்கு கர்னல் பென்னிகுயிக் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்தால் குடியா முழுகி விடும் என்று இன்று நிறைவு செய்கிறேன்.
வரலாறு விரியும்..!
கட்டுரையாளர் : – ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry