புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவும், சர்ச்சைகளும்! பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?

0
86
An aerial view of newly-constructed Parliament building.(PTI)

4 Min(s) Read : சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி நாளை(மே 28 ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கிறார். மே 28 அன்று விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140வது பிறந்த ஆண்டு தினம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் இந்த நாளில்தான் நடைபெற்றது.

ராஜபாதைக்கு அருகேயுள்ள பகுதியே சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர போதிய இடமில்லை என மத்திய அரசு கூறுகிறது. தற்போது, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 545. 2026ஆம் ஆண்டுவரை இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அதன் பிறகு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்போது புதிய எம்.பி.க்களுக்கு போதிய இடம் இருக்காது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம்-2இல் டெல்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை டெல்லி எட்டியுள்ளது.

Also Read : புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய இடம்பிடிக்கும் தமிழகத்தின் செங்கோல்! வரலாற்றுப் பின்னணியுடன் சுவாரஸ்யமான தகவல்!

இட நெருக்கடி, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று 2010ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதே விவாதிக்கப்பட்டது. 2012ல் அப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், நாடாளுமன்ற கட்டிடத்துக்கான மாற்று ஏற்பாடுகளை பரிசீலிப்பதற்காக குழு ஒன்றை அமைத்தார்.

2019ல் மத்திய நிர்வாகப் பகுதியை முழுமையாக மறுவடிவமைப்பு செய்வதற்கான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை பாஜக அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழான நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020 டிசம்பர் 10 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் தாண்டி மூன்று ஆண்டுகளுக்குள் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய அவையில் மக்களவை உறுப்பினர்களுக்காக 888 இருக்கைகள் உள்ளன. புதிய அவையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 384 பேர் அமர முடியும். நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின் போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.

‘காகிதமில்லா அலுவலகங்கள்’ என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும். எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் போன்றவை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும். இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.

பழைய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் ‘கவுன்சில் ஹவுஸ்’ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? கட்டாயமாக விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

பழைய நாடாளுமன்றக் கட்டடம் 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிலையில், புதிய கட்டிடம் சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது. அதிகாரிகளின் தகவல்படி, ‘புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பழைய கட்டிடமும் அப்படியே பராமரிக்கப்பட உள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்’. புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், சாவர்க்கரைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகள் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு மத்திய அரசு அவரது பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்தது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
அந்தமான் செல்லுலர் சிறையில் கைதியாக இருந்தபோது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டதாக சாவர்க்கர் விமர்சிக்கப்படுகிறார், அதே நேரத்தில், மகாத்மா காந்தியைக் கொல்லும் சதித்திட்டத்தில் சாவர்க்கரின் பங்கு இருந்ததாக எழுந்துள்ள கேள்விக்குறி முற்றிலுமாக இன்னும் தீர்க்கப்படவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கருதுகின்றனர்.

Vinayak Damodar Savarkar

ஆனால், பிரசார் பாரதியின் தலைவராக இருந்த ஏ.சூர்ய பிரகாஷ் கூறும்போது, “மகாத்மா காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய மனுக்களைப் பார்த்தால் அவற்றுக்கும் சாவர்க்கரின் மனுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது. இந்தியாவின் மகத்தான மகனுக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். 1857 இன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 1910 இல் சாவர்க்கர் ஒரு புத்தகத்தை எழுதியபோது ஆங்கிலேயர்கள் அதைத் தடைசெய்தனர். சாவர்க்கர் எவ்வளவு பெரிய தேசபக்தர் மற்றும் புரட்சியாளர் என்பதை புரிந்துகொள்ள அதை படிக்க வேண்டும். இந்தியாவை சுதந்திர நாடாக பார்ப்பதற்கு அவர் எதையும் செய்ய தயாராக இருந்தார்.” இவ்வாறு தெரிவித்தார்.

”குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளைக் கொண்டதாக நாடாளுமன்றம் இருக்கும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றத்தில் எந்தப் பங்கும் இல்லை,”. அப்படியிருக்கும்போது, “குடியரசுத்தலைவரை நாடாளுமன்றத்தை திறந்து வைக்க அழைக்காதது அல்லது விழாவிற்கு அழைக்காதது, நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 1975 ஆகஸ்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணை கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் 1987 இல் பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்தை திறந்து வைத்தார். காங்கிரஸ் அரசின் தலைவர் திறந்து வைக்கலாம் என்றால், எங்கள் அரசின் தலைவர் ஏன் அதை செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்புகிறார்.

Also Read : கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனவும் ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைகளுக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாலை காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது சரியானதல்ல. நாடாளுமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. இதில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது.

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு, முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் உட்பட 270 பிரபலங்கள் கையெழுத்து பிரச்சாரம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 88 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், 10 முன்னாள் தூதர்கள், 100 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், 82 கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமைமிக்க தருணம்’’ என்ற தலைப்பில் முன்னாள் தூதர் பஸ்வதி முகர்ஜியின் தலைமையில் அறிக்கையில் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.

எதிர்கட்சியினர் தெரிவித்துள்ள கருத்துக்கள், வீணானது, முதிர்ச்சியற்றது, கேலிக்கூத்தானது, ஜனநாயக மற்றது. 2023 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுதலைவர் திரவுபதி முர்முவின் உரையை புறக்கணித்தவர்கள்தான், இன்று அவரே புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என கூறுகின்றனர்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry