கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை! கேரள சுற்றுலா மாஃபியாக்களால் அல்லாடும் தமிழக மக்கள்!

0
184
Arisikomban Elephant roams around the Cumbum Town

கேரளாவிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் என்ற யானை புகுந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்டவற்றை விருப்ப உணவாக உண்டதால் இந்த யானையை கேரளாவில் அரி கொம்பன்(அரிசி கொம்பன்) யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

இடுக்கி மாவட்டம் உடுமஞ்சோலை தாலுகாவில் உள்ள சின்னக்கானல் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒற்றை யானை, அந்தப் பகுதியில் வாழும் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்ட தமிழ் தொழிலாளிகளுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அட்டூழியத்தை நடத்தி வருகிறது.

வெறும் 350 ரூபாய் கூலிக்காக நாள் ஒன்றை செலவிடும் அப்பாவி தேயிலைத் தோட்ட, ஏலக்காய் தோட்ட தமிழ் தொழிலாளிகள், அந்த யானையின் நடமாட்டத்தால் வருடத்தில் 100 நாட்களுக்கு மேல் வேலை இழப்புக்கு ஆளானார்கள். மூர்க்கம் பிடித்த அந்த யானை ஒரு கட்டத்தில் சின்ன கானல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை சூறையாட ஆரம்பித்தது. இலை தழைகளை தின்று வாழக்கூடிய யானை, மெதுமெதுவாக திசை மாறி அரிசியையும், சீனியையும் உண்டதற்கு பின்னால், ஒரு அரசியல் இருந்தது.

Also Read : புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவும், சர்ச்சைகளும்! பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?

மூணாறு சுற்றுலா என்றாலே அது சூரியநெல்லியை மையப்படுத்தியதுதான். அங்குதான் கிளப் மகிந்திரா, ஸ்டெர்லிங் உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா விடுதிகள் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை எந்நேரமும் நாம் சூரியநெல்லியில் பார்க்க முடியும்.

தெரிந்து கொள்ளுங்கள், மூணாறு நகரிலுள்ள நிலமதிப்பை விட, சூரியநெல்லியில் நில மதிப்பு 10 மடங்கு அதிகம். மூணாறு கேட்டரிங் காலேஜ் என்கிற பெயரில், சூரிய நெல்லியை அடுத்து 200 ஏக்கரில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் கேரளாவில் புகழ்பெற்ற சர்ச்சைக்குரிய தச்சங்காரி.

சின்ன கானல் பகுதியில் நிலவேட்டையை தொடர்ந்த மலையாள சுற்றுலா மாஃபியாக்களுக்கு பெருத்த இடைஞ்சலாக இருந்தது இந்த அரிசி கொம்பன். ஆரம்பத்தில் காடுகளுக்குள் செல்பவர்களை தாக்கி வந்த அரிசி கொம்பனை, ஒரு கட்டத்தில் நில மாஃபியாக்கள் ஏலக்காய் தோட்ட பகுதிக்குள் வெடி வைத்து விரட்டி அடித்தார்கள். வெடியின் தாக்கத்தால் மூர்க்கமடைந்த அரிசி கொம்பன், கண்ணில் படுவோரை எல்லாம் அடித்துத் துவைக்க ஆரம்பித்தது. சின்னக்கானல், சூரியநெல்லி பகுதி தமிழ் மக்கள், ஒரு கட்டத்தில் அரிசி கொம்பனை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

அரிசி கொம்பன் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்ததும் களத்திற்கு வந்த கேரள வனத்துறை, அரிசிக்கொம்பனை பிடித்து இடமாற்றம் செய்ய உத்தேசம் செய்தது. அதற்காக அவர்கள் முதலில் தேர்வு செய்தது பாலக்காடு மாவட்டத்தை ஒட்டியுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு வனப்பகுதி. அந்த மாவட்டத்தில் உள்ள முதலமடை பஞ்சாயத்தை அடுத்து இருக்கும் அடர்ந்த வனப் பகுதிக்குள் அரிசி கொம்பனை விட்டுவிட்டால், அங்கிருந்து அது தன்னுடைய இடத்தை தேர்வு செய்து இடம்பெயராது என்று முடிவு செய்தார்கள்.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

ஆனால் இந்த செய்தி அறிந்து களத்திற்கு வந்த ஆலத்தூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ரம்யா ஹரிதாஸ் தலைமையில், முதலமடை பஞ்சாயத்தில் போராட்டம் வெடித்தது. தொடர்ச்சியாக கடையடைப்பும் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரமானதால் அரிசி கொம்பனை பரம்பிக்குளம் ஆழியாறுக்கு இடம்பெறச் செய்யும் முயற்சியை கைவிட்ட கேரள மாநில வனத்துறை, அடுத்ததாக தேர்வு செய்தது தான் இன்றைக்கு இருக்கும் அவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.

கேரள மாநில வனத்துறை அமைச்சரான ஏ.கே.சசீந்திரன் அடிப்படையில் சுய புத்தி இல்லாதவர். அவரின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு பச்சைக் கொடி காட்ட, அரிசிகொம்பனை இரண்டு நாள் இடைவெளியில் பொறிவைத்து பிடித்த கேரள மாநில வனத்துறை, லாரியில் ஏற்றி ஏதோ தேசிய தலைவர் ஒருவரை அழைத்து வருவது போல சின்னக்கானலில் இருந்து பூப்பாறை ,நெடுங்கண்டம், கட்டப்பனை, உடுமஞ்சோலை வழியாக பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள மேட்டகானம் வனப்பகுதியில் கொண்டு வந்துவிட்டது.

மேட்டகானம் வனப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக அது உணவாக உட்கொண்ட ரேஷன் அரிசி கிடைக்காததால், மூர்க்கமடைந்து அங்கிருந்து தமிழக எல்லையை நோக்கி நகர ஆரம்பித்தது. அதனுடைய இருப்பிடத்தை கண்டறிவதற்காக அரிசி கொம்பனின் கழுத்தில் கேரள மாநில வனத்துறை கட்டியிருந்த ரேடியோ காலர் கருவி அவ்வப்போது செயலிழந்து விட்டதாக கதை எழுதிய கேரள மாநில வனத்துறையால், நெருக்கடிக்கு உள்ளானது தமிழக வனத்துறை.

Also Read : கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!

இரண்டு மாநில வனத்துறை அதிகாரிகளுக்குள்ளும் ஏற்பட்ட தகவல் பரிமாற்ற குறைபாட்டால், மேகமலையில் உள்ள மணலாறு தேயிலைத் தோட்ட பகுதிக்குள் புகுந்தது அரிசிக்கொம்பன்.
மேகமலைக்குள் அரிசி கொம்பன் புகுந்ததும் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக 144 தடை உத்தரவை பிறப்பித்த தேனி மாவட்ட வனத்துறை, எஸ்டேட் தொழிலாளிகளை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தது.

தேயிலை கம்பெனி முதலாளி கோயம்புத்தூரில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குப்புறக்கிடந்து கொண்டு எஸ்டேட்டை இழுத்துப் பூட்ட சொன்னார். ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக காலியான நிலையில் இருந்த மேகமலை பகுதியில், கொஞ்சநஞ்சமிருந்த அப்பாவி தோட்ட தொழிலாளர்களும் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நெருக்கடி ஏற்பட்டது.

அவர்களுடைய வாழ்வாதாரத்தை குறித்து சிந்திக்காத வனத்துறை அதிகாரிகளால் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள் மேகமலைவாசிகள். அந்த யானையை பிடித்து அப்புறப்படுத்த எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். கேரளாவில் இருந்து வந்த யானை என்பதால் கேரளாக்காரன் தான் அப்புறப்படுத்த வேண்டுமா..?

தமிழக வனத்துறை வெகு எளிதாக அதை பிடித்து முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி இருக்கலாம். அதனுடைய உணவு முறையை மாற்றினாலே கட்டுக்குள் வரும் என்று ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம். அது எப்படா கேரளாவிற்குள் செல்லும் என்று காத்துக் கிடந்தது தேனி மாவட்ட வனத்துறை. அரிசியை தேடிய அரிசி கொம்பனின் பயணத்தில், இன்று கையில் சிக்கி இருப்பது கம்பம் நகரம். அதனுடைய உணவு முறையை மாற்றாத வரை அதனை நம்மால் ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது.

Also Read : செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

காட்டுக்குள் கிடந்த யானையை மலையாள வனத்துறை வெடிவைத்து தமிழகத்திற்குள் விரட்டுவதும், தமிழக வனத்துறை கேரள வனத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் தடுமாறுவதுமாக, இரண்டு மாநில வனத்துறை அதிகாரிகளும் நடத்திய கதகளி ஆட்டத்தால் அப்பாவிகள் நிம்மதி இழந்து நிற்கிறார்கள்.

ஒன்று அரிசிக்கொம்பனை பொறி வைத்துப் பிடித்து முதுமலை தெப்பக்காட்டுக்கு அனுப்ப வேண்டும், இல்லையேல் அதை சுட்டுப் பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் மூல காரணம் சின்னக்கானல் பகுதி சுற்றுலா மாபியாக்கள என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த லட்சணத்தில் குமுளி கட்டப்பனை நெடுங்கண்டம் பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு ஆட்டோ ஸ்டாண்ட், ரசிகர் மன்றங்கள் என்று உருவாகி வருவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ரசிகர் மன்றம் வைத்திருப்பவனுடைய வீட்டில் அரிசி கொம்பனால் ஒருவன் செத்து இருப்பானானால் இந்த வேலையை அவன் செய்வானா?

எப்படி இருப்பினும் அரிசி கொம்பனை பிடிக்க வேண்டிய வேலை தேனி மாவட்ட வனத்துறைக்கு சொந்தமானது. இனி கேரள மாநில வனத்துறையை நம்பாமல் தமிழக வனத்துறையே யானையைப் பிடித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கட்டுரையாளர் : ச.அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர் – பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry