Saturday, January 28, 2023

மயான பூமியாக மாறும் தமிழகம்! காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை! திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த திறமையற்ற ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.

இதை நான் சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், செய்தியாளர்கள் பேட்டியிலும் பலமுறை சுட்டிக்காட்டியும், முதல்வரோ, மூத்த அதிகாரிகளோ, காவல் துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சமூக விரோத சக்திகளும், கொடுஞ்செயல் புரிவோரும் இந்த ஆட்சி தங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது போல் பல்வேறு குற்றங்களைப் புரிந்து மக்களை மிரட்டி வருகிறார்கள்.

Also Read : கனியாமூர் பள்ளி கலவரம்! அதிர்ச்சி அளிக்கும் சேத மதிப்பு! சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!

சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை. சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரவுடி, வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறையின் உதவி ஜெயிலர், ஜெயிலில் திடீர் சோதனை நடத்தும்போது, மேலே குறிப்பிட்ட கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால், ஆத்திரமடைந்த அந்த கைதி உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 27.8.2022 அன்று கடலூர் சிறை வளாகத்திற்கு அருகில், காவலர் பாதுகாப்புடன் கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீசி எரித்திருக்கிறார்கள். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்ததாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read : தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கவில்லை! உண்மையை அம்பலப்படுத்திய மத்திய அரசு!

இதே போன்று தமிழகத்திலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேர்மையான முறையில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில், அவரது வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த 28.8.2022 அன்று மதுரை மத்திய சிறையில் 62 வயது கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இந்த திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, சிறையில் உள்ள ஒருசில கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை, கைதிகளை திருத்தப் போராடும் நேர்மையான காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. அதேநேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், பொதுமக்களும் குறிப்பாக பெண்களும் பாதுகாப்போடு இருந்ததை இப்போது உணர்கிறார்கள். தற்போது பட்டப்பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, பெண்கள் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி இருக்கின்ற காரணத்தால் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி நடுங்குகிறார்கள். “ஒரு பெண் நகைகளை அணிந்து இரவில் தனியாக சாலையில் போகும் நாள்தான், நாம் உண்மையான சுதந்திரம் பெற்ற நாள்” என்று மகாத்மா காந்தியடிகள் அன்றே சொன்னார்.

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய திமுக ஆட்சியில் அழிவுப் பாதைக்கே சென்றுவிட்டது. “இந்த திமுக ஆட்சி என்று அகற்றப்படுமோ அன்றுதான் எங்களுக்கு முழு சுதந்திரம்” என்று தமிழக மக்கள் அலறல் எழுப்புவது இந்த ஆட்சியாளர்களின் காதில் விழாதது ஆச்சரியமே.

முதல்வரின் காதுகளில், அவரை பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையோ? மக்களைக் காக்க திறமையில்லாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால், திமுக அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அதிமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles