சட்டவிரோத கனிம கொள்ளையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்! தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

0
56
Explore the widespread issue of illegal mining involving a majority of MPs and MLAs. Learn about the accusations, ongoing investigations, and the political implications of mining scandals in India.

‘கனிமவளக் கொள்ளைக்கு காரணமாக இருக்கும் குவாரி உரிமையாளர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர்களையும் அதன் உரிமையாளர்களையும் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது என்று தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், “மணல் கொள்ளை சம்பந்தமாக அமலாக்கத்துறை ரெய்டுகளை நடத்திய பிறகு மணல் அள்ளுவது முழுவதுமாக நின்றுவிட்டது. ஒரு வருடமாக கட்டட தொழிலுக்கு எம் சாண்டை மட்டும்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். எம் சாண்ட்தான் விலைகுறைவு என்பதால் கட்டட ஒப்பந்ததாரர்களும் மணலை விட அதைத்தான் விரும்புகின்றனர். இந்த எம் சாண்டை உற்பத்தி செய்வதில்தான் பிரச்னையே.

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் 27.01.2025 அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது.

2021 ஜூன் வரைக்கும் ஒரு 506 நபர்களுக்கு எம் சாண்டை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 4000 கிரஷ்ஷர்கள் மூலம் அவர்கள் எம் சாண்டை உற்பத்தி செய்து வந்தார்கள். 2021 ஜூனுக்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்கவே இல்லை. ஆனாலும் இன்னமும் அந்த கிரஷ்ஷர்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன.

கூடுதலாக 1000 கிரஷ்ஷர்கள் கூட இப்போது வந்துவிட்டது. இவர்கள் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. அவர்களிடம் கேள்வி கேட்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை வாங்கிவிட்டோம் என்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டால், நாங்கள் மாசு ஏற்படும் விஷயங்கள் சம்பந்தமாக மட்டும்தான் ஆய்ந்து அனுமதி கொடுக்கிறோம் என்கிறார்கள்.

இவர்களிடம் முறையான அனுமதியே கிடையாது. மேலும், இவர்களுக்கென ஒரு சட்டத்திட்டமே கிடையாது. எம் சாண்ட்டுக்காக எவ்வளவு மலையை உடைக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஏனெனில், அங்கேயெல்லாம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பில்கள்தான் விநியோகிக்கப்படுகிறது.

Also Read : தனியார்மயமாகிறதா போக்குவரத்துக்கழகம்..? மோடி அரசின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசு! மக்கள் விரோத முடிவுக்கு எதிர்ப்பு!

மற்ற மாநிலங்களைப் போல கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வாருங்கள் என பல முறை கேட்டுவிட்டோம். அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை. கம்ப்யூட்டர் பில்கள் எனில் கட்டாயம் எல்லாம் ரெக்கார்டுகளுக்குள் வரும். அனுமதித்த அளவை மீறி எவ்வளவு அதிகமாக மலைகளை உடைக்கிறார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

கனிமவளத்துறை அதிகாரி இது சம்பந்தமாக நல்ல முயற்சியை முன்னெடுத்தால் உடனே பணிமாற்றம் செய்துவிடுகிறார்கள். இந்த அரசாங்கம் வந்தவுடன் அதிகமான மலைகளை ஏலம் விட்டு அதிகமாக மலைகளை உடைக்கவும் செய்கிறார்கள். கிரஷ்ஷர்களில் ஒரு மணி நேரத்துக்கு 500-1000 டன் எம் சாண்டை அரைத்துக் கொடுக்கக்கூடிய மெஷின்களெல்லாம் வந்துவிட்டன.

ஒரு மணி நேரத்துக்கு அத்தனை டன் அரைக்கிறார்கள் எனில் அதற்காக எவ்வளவு அதிக மலைகளை உடைத்திருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள். ஓசூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில்தான் அதிகமாக மலையை குடைகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 120-130 மலையை எம் சாண்ட்டுக்காக உடைத்து வருகிறார்கள். இதில் 70 மலைகள் ஓசூரில் மட்டுமே இருக்கிறது. ஓசூர் என்ன அவ்வளவு கட்டமைப்பு வேலை நடக்கும் பகுதியா? அங்கே மலைகள் உடைக்கப்பட்டு எடுக்கப்படும் எம் சாண்ட் எல்லாம் கர்நாடகாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு 4000 லோடு கர்நாடகாவுக்கு செல்கிறது.

ஒரு லோடுக்கு 30-50 டன் எம் சாண்ட் வரை இருக்கும். முறையாக எந்த அனுமதியும் இல்லாமல் இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். ஆனால், லாரி உரிமையாளர்களான நாங்கள் ஒரு லோடுக்கு என்ன தொகையோ அதை கொடுத்து, அதற்கான ஜி.எஸ்.டியையும் கொடுத்துதான் லோடு ஏற்றி வருகிறோம். ஆனால், எங்களுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு லோடு எடுத்துச் செல்ல ‘Transit Pass’ வேண்டும் என்கிறார்கள்.

உற்பத்தி செய்து முடிந்த ‘Finished Product’ ஐ எடுத்துச் செல்ல ‘Transit Pass’ தேவை இல்லையென நீதிமன்றமே கூறியிருக்கிறது. அலாவுதின் ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழுவுமே அதைத்தான் சொல்கிறது. ஆனால், குவாரிக்களில் எதாவது விபத்து, முறைகேடு என சர்ச்சையானால் எங்களின் லாரிகளைத்தான் முதலில் பிடிக்கிறார்கள்.

Also Read : கனிமவளக் கொள்ளை: தொடர்கதையாகும் கொலைகள்! பூவுலகின் நண்பர்கள் சரமாரிக் கேள்வி?

‘Transit Pass’ இல்லையென சொல்லி எங்களின் மீது திருட்டு மற்றும் கடத்தல் வழக்குகளை பதிவு செய்கிறார்கள். புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சையில், தேனாம்பேட்டையில் லோடு ஏற்றி வந்த 8 லாரிகளை தாசில்தார் சிறைப்பிடித்து விட்டார். அந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிந்து இப்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

ஒரு பொருளை உரிய தொகை கொடுத்து வாங்கி வருவது எப்படி திருட்டாகும்? கனிமவளங்கள் சார்ந்து எந்த சர்ச்சை ஏற்பட்டாலும் குவாரி உரிமையாளர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர்களையும், உரிமையாளர்களையும் குற்றவாளி ஆக்கிவிடுகிறார்கள். 50,000 ரூபாய் அபராதம் கட்டித்தான் லாரியை ரிலீஸ் செய்ய முடிகிறது. ஆனால், சட்டவிரோதமாக வளங்களை கொள்ளையடிக்கும் குவாரி உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதை தவிர்க்க ஈ – வே பாஸ் கொடுங்கள் என கேட்கிறோம்.

கம்ப்யூட்டர் மூலம் எங்களுக்கு ஈ வே பாஸ் கொடுத்தால் எவ்வளவு வளங்கள் எடுக்கப்படுகிறது, எவ்வளவு வளங்கள் லோடாக வெளியில் செல்கிறது என்பதெல்லாம் தெளிவாக தெரிந்துவிடும். ஆனால், அதையெல்லாம் அதிகார வர்க்கம் செய்வதில்லை. எம்.பி, எம்.எல்.ஏ க்கள் பெரும்பாலானோர் இப்படியாக சட்டவிரோத கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால்தான் இதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். ஓசூர், கிருஷ்ணகிரியின் வளங்கள் மொத்தத்தையும் விரைவில் முழுங்கிவிடுவார்கள். அதற்குள் எதாவது செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry