தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழ்நாட்டின் இயற்கையையும், சூழலையும் சீர்குலைக்கும் இச்செயல்களை தடுக்க அரசு கண்டும் காணாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விகடன் இணைய இதழில் வெளியாகியுள்ள செய்தியை பார்க்கலாம். “தமிழகத்தில் இருக்கும் கனிம வளங்களை அதிகாரிகளும், மைன்ஸ் மாஃபியாக்களும் கைகோத்துக்கொண்டு சூறையாடி வருகிறார்கள். ஆளுங்கட்சிப் புள்ளியின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் நடக்கும் இந்த பிசினஸால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்” என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!
கோவை மாவட்டத்தில் மைன்ஸ் மாஃபியாக்களுக்கு எதிராகப் போராடிவரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி இது குறித்து பேசும்போது, “கேரளாவில் 80% மலைகள் இருந்தும் எட்டு குவாரிகளுக்குத்தான் அனுமதி. தமிழகத்தில் இருப்பது 22% மலைகள்தான். ஆனால் புற்றீசல்போல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
திருப்பூரில் இருக்கும் கோடாங்கி பாளையம் கிராமத்தில் மட்டும் 32 குவாரிகள் இயங்குகின்றன. இங்கு அரசு அனுமதித்த அளவைவிட சட்டவிரோதமாக 400 அடி வரை வெட்டி கனிமங்களை எடுக்கிறார்கள். இதற்கு முறைகேடாக ஜெலட்டின் மருந்துகளை டன் கணக்கில் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடும் நில அதிர்வு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிறகு 18 சக்கரங்கள் வரை கொண்ட லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக கனிமங்களை கேரளாவுக்குக் கொண்டு செல்கிறார்கள். நாள்தோறும் 2,000 லாரிகள் செல்கின்றன. இதற்கு கேரளாவில் தேவை அதிகரித்திருப்பதுதான் காரணம். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அங்கு சம்பாதிக்கும் பணத்தில் சொந்த ஊரில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?
இதற்குத் தேவையான பொருள்களைக் கூடுதல் விலைக்கு வாங்குகிறார்கள். எனவேதான் நல்ல மார்க்கெட் கிடைப்பதால், தமிழகத்திலிருந்து கடத்திச் செல்கிறார்கள். இவ்வாறு செல்லும் லாரிகளை சோதனைச் சாவடிகளில் பிடிப்பதில்லை. அரசியல்வாதிகளின் ஆட்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.800 லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள்.
இதுதவிர வளர்ச்சி நிதி என்ற பெயரில் சில ஆயிரங்களை வசூலிக்கிறார்கள். இதனால் கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். கேரளா உயர்வதற்கு தமிழகம் பள்ளமாகிவிடும். கைவிடப்பட்ட குவாரிகள் மூடப்படாததால் கால்நடைகள், வனவிலங்குகள், மனிதர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்தார்கள். இந்தோனேசியா, வியட்நாம் போன்றவை நிலநடுக்கப் பகுதிகள். அங்கு அதிகமாக மரத்தில்தான் வீடு கட்டுவார்கள். எனவே, அங்குள்ள ஆற்றில் மணல் அதிகமாக இருக்கிறது. அவற்றை இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டால் தமிழகம் காப்பாற்றப்படும். ஆனால், இதில் அரசியல்வாதிகளுக்குப் பலன் கிடைக்காது.
எனவேதான் இங்கிருந்து சட்டவிரோதமாக வெட்டி எடுக்கிறார்கள். இந்தக் கொள்ளையை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கைகோத்துக் கொண்டு செய்கிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட், குவாரிகளிலிருந்து அள்ளப்படும் கனிமங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது” என வருத்தப்பட்டார்.
Also Read : பாலைவனமாகும் தமிழ்நாடு? திட்டமிட்டு நசுக்கப்படும் வேளாண்மை! கனிமங்கள் கடத்தலைத் தடுப்பதில் அக்கறையின்மை!
இது குறித்து நெல்லை, தென்காசியில் கனிமக் கடத்தலுக்கு எதிராகப் போராடிவரும் முன்னாள் எம்.எல்.ஏ ரவி அருணன் நம்மிடம், “நெல்லையில் மட்டும் 55-க்கும் மேற்பட்ட குவாரிகளும், தென்காசி மாவட்டத்தில் 23 குவாரிகளும் செயல்படுகின்றன. அங்கிருந்து நாள்தோறும் 400 வாகனங்களில் கனிமங்களைக் கடத்திச் செல்கிறார்கள். கடையம் அருகில் பெருமாள் நாடானுர் என்ற கிராமத்தில் விளையும் எலுமிச்சைப்பழத்துக்கு மார்க்கெட் அதிகம்.
இங்கு அரசு ஏற்கெனவே மூன்று குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. அவர்கள் அதிக ஆழத்துக்கு வெட்டி, கனிமங்களை எடுத்துவருவதால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிட்டது. விவசாயிகள் டிராக்டரில் தண்ணீர் வாங்கி எலுமிச்சை மரங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் 4-வதாக ஒரு குவாரிக்கு ஒப்புதல் கொடுத்து, கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்கள்.
முன்னதாக கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக குவாரி திறக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள், பகுதிவாசிகள். அதையும் மீறி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். ஓவர் லோடு ஏற்றப்படும் லாரிகளைச் சிறைப்பிடிக்க வேண்டும். அதற்கு அனுமதித்த குவாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விதி.
Also Read : சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி! புகார் அளித்தவர் லாரி ஏற்றிக் கொலை!
ஆனால் இவர்கள் பெயரளவுக்கு அபராதத்தை மட்டும் விதித்துவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். ஒவ்வொரு குவாரியிலும் இரவு, பகலாக போலி பாஸ் அச்சடிக்கும் வேலை நடக்கிறது. இதில் கனிம வளத்துறை அதிகாரிகள் பலருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இதுதவிர சில பகுதிகளில் பாஸ் இல்லாமல் கனிமங்களை லாரிகளில் கடத்திச் செல்கிறார்கள். பணம் பெற்றுக்கொண்டு எந்த குவாரியிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்துவதில்லை.
இதற்கிடையில் தற்போது கேரளாவைச் சேர்ந்தவர்கள் நெல்லை, தென்காசியில் இடம் வாங்கி குவாரிகளை அமைத்து கனிமங்களை வெட்டிக் கடத்திவருகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன. இதே நிலை நீடித்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இதற்குப் பின்னால் ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர்தான் இருக்கிறார்” என்று கொதித்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள் சிலர், “கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், `2022-23-ம் நிதியாண்டில் மார்ச் வரையில் அனுமதியின்றி கனிமங்களைக் கடத்திய 4,799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அபராதமாக ரூ.41 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டவிரோதச் சுரங்கம், குவாரிகளைத் தடுக்க ஆண்டுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.
கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் இதனால் மைன்ஸ் மாஃபியாக்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இல்லை. அவர்கள் நாள்தோறும் கேரளாவுக்கு மட்டும் 2,000 லாரிகளில் கனிமங்களைக் கடத்திச் செல்கிறார்கள்.
இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருக்குத் தொடர்பு இருக்கிறது. அவரின் பரிபூரண ஆசீர்வாதத்துடன்தான் தமிழக கனிம வளங்களை மைன்ஸ் மாஃபியாக்கள் சூறையாடிவருகிறார்கள். இதற்கு கைம்மாறாக அவருக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கிறார்கள். எனவேதான் எவ்விதமான தங்கு தடையும் இல்லாமல் இந்த பிசினஸ் ஜரூராக நடந்துவருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்” என்றனர் வேதனையாக.
இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல் ராஜிடம் விளக்கம் கேட்டோம். “முன்புதான் அதிகமாகக் கடத்திக்கொண்டிருந்தார்கள். பிறகு எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, கடத்தல் குறைந்துவிட்டது. வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துச் செல்வோர் 20% பசுமை வரி செலுத்த வேண்டும். தற்போது அதை 50%-ஆக உயர்த்தியிருக்கிறோம். இந்த விதி வரும் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் பிறகு கனிமக் கடத்தல் மேலும் குறையும்” என்றார்.
Courtesy : vikatan.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry