உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி செரிமானத்திற்கு உதவும் என்பது பொதுவான நம்பிக்கை. அதேநேரம், உணவுக்குப் பிறகு மேற்கொள்ளும் சிறிது நேர நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக Type – 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், உணவு உண்ட 60 முதல் 90 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளும் சில நிமிட நடைப்பயிற்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க பெருமளவு உதவுகிறது. ஏனெனில் அப்போதுதான் இரத்தத்தில் சர்க்கரை அளவு உச்சத்தில் இருக்கும். ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள், இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவு, இதய ஆரோக்கியத்தின் அளவீடுகளை கண்டறிய, ஆய்வுக்கு வந்தவர்களை நிற்க வைத்து, உட்கார வைத்து மற்றும் நடக்க வைத்து சோதனை செய்தனர்.
ஏழு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, உணவுக்குப் பிறகு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் லேசான நடைபயிற்சி செய்வது “இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நமது உணவு முறைகளைப் பொறுத்தவரை, உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு பெரும்பாலும் அதிகமாகவும், கட்டுப்படுத்த கடினமானதாகவும் இருக்கும். பணியிடத்தில் நீண்ட நேரம் செலவிடுபவர்கள் டிரெட்மில்லில் ஓடுவதை விட, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மினி நடைபயிற்சி செய்வது மிகவும் பயன்தரக்கூடியது என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
Also Read : வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடவே கூடாது! டயட் என்ற பெயரில் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்!
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்வது, சரியானபடி மருந்துகளை எடுத்துக்கொள்வது, சாப்பாட்டுக்குப் பிந்தைய 2 – 5 நிமிட நடைப்பயிற்சி ஆகியவை, நீரிழிவு நோயாளிகளை சகஜமான வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சியின்போது, தசைகள் குளுக்கோஸை செல்களுக்குள் வேகமாக செலுத்த உதவுகின்றன, அதே நேரத்தில் உடலில் உள்ள இன்சுலினை மிகவும் திறம்படச் செயல்பட வைக்கின்றன. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கும் என்று பிரபல நீரிழிவு மருத்துவர் வி. மோகன் கூறியுள்ளார்.
இரவு உணவை சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லும்போது, அது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதுடன், உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாது, கல்லீரலில் அதிகளவு கொழுப்பு படிவதற்கும் இது வழிவகை செய்கிறது. அதாவது, ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவருக்கு (non-alcoholic fatty liver) வழிவகுக்கும். இரவு உணவிற்குப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நடந்தால் இதைத் தடுக்கலாம்.
Also Read : கோதுமை ரவா பிசிபேளாபாத்! நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது!
முந்தைய இரண்டு ஆய்வு முடிவுகளுக்கு தற்போதைய ஆய்வு முடிவு வலுசேர்க்கிறது. 2016 ஆம் ஆண்டு Type – 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகு 10 நிமிடங்கள் நடப்பது, நாளின் மற்ற நேரங்களில் அரை மணி நேரம் நடப்பதை விட ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவியது கண்டறியப்பட்டது. இதற்கு முன், 2011 ஆம் ஆண்டு பொது மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளும் நடைபயிற்சி எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்படவில்லை. இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றே, உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
Also Read : குடம்புளி…! வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry