வார ராசி பலன்! சோஷியல் மீடியாவால இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்! கருத்து கந்தசாமியா இருந்தா சிக்குவீங்க… உஷார்!

0
105
Weekly Horoscope: Check Astrological prediction from August 7th to 13th August 2023.

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 7ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : வேகமும், விவேகமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசியில் குரு, ராகுவோடு சந்திரனும் இணைவதால் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேகமான சிந்தனை, விரைவான செயல்பாடுகளால் மற்றவர்களை மிரள வைப்பீர்கள். தாய் மீது பாசம் அதிகரிக்கும். தாயின் அன்பிற்கு தந்தையின் பாசத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வீர்கள். 2, 7க்குடைய சுக்கிரன் வக்கிரமாகி 4ம் இடமான கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி, தாயாருக்கு நகைகள் வாங்கி கொடுத்து அழகு பார்ப்பீர்கள். பால் பொருட்கள், தண்ணீர், அரிசி, உணவு பொருட்கள் விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு அழகு சாதனப் பொருட்கள் விற்பனையில் உள்ளவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. சந்திராஷ்டமம் இல்லை.

ரிஷபம் : மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்பும் ரிஷப ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் வக்கிர கதியில் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு சஞ்சாரம் செய்வதால் ஆசைகளை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை தரும் வாரமாக அமையும். பின்னணி பாடகர்கள், இசைக்கலைஞர்கள், இசைக்குழுவில் இருப்பவர்கள் புகழ் பெறும் யோகம் உண்டாகும். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் நபர்களுக்கு புதியவர்கள் அறிமுகம் கிடைத்து அதன்மூலம் வாய்ப்பு அமையும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போது கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு சிறப்பாக அமையும். விரும்பிய பாடப்பிரிவு எதிர்பார்த்த கல்லூரியில் கிடைக்கும். அக்கவுண்ட்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

Also Read : நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

மிதுனம் : நகைச்சுவை குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 3ல் இருப்பதால் டெக்னாலஜி சார்ந்த விஷயங்களில் தனி முத்திரை பதிப்பீர்கள். மிதுன ராசிக்கு ஆகாத செவ்வாய் உடன் புதன் இணைவதால் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடும் போது சற்று கவனமாக இருங்கள். பொய்யை உண்மை என்று சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள். நீங்களே வதந்தி பரப்புவது அல்லது உங்களை பற்றி மற்றவர்கள் வதந்தி பரப்ப வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் லோன் செயலிகளை தவிப்பது நல்லது. அரசு சார்ந்த ஒப்பந்தங்களை ஆன்லைன் மூலம் பெறுவீர்கள். பங்குச்சந்தைகளில் இன்ட்ரா டே டிரேடிங்கில் ஈடுபடுபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாய் மற்றும் சித்தப்பா உறவுகள் வழியில் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மூலமாக உங்களது ஆசைகள் நிறைவேறும். கடல் கடந்த வியாபாரத்தால் லாபம் அடைவீர்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கடகம் : சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசியில் சூரியன், சுக்கிரன் இருந்தால் மற்றவர்களை வசீகரிப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வீர்கள். வேலை, தொழிலில் வேகம் அதிகரிக்கும். தாயாரின் தொழிலை செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். குளிர்பானங்கள், வெள்ளை நிற திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மின்னணு பொருட்கள், ஜவுளி விற்பனையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான வாரம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பூர்வீக சொத்து கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு நன்கு படித்து பார்ப்பது நல்லது. 12, 13 ஆகிய தேதிகளில் வீடு , பழைய வாகனங்களை விற்பதற்கான வழிகள் பிறக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்பதால் முக்கிய வேலைகளை தாராளமாக செய்யுங்கள்.

Also Read : குறையும் தக்காளி விலை! 150% வரை உயரப்போகும் வெங்காயம் விலை! எச்சரிக்கும் ரிப்போர்ட்!

சிம்மம் : பெருந்தன்மை குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் 12ல் இருப்பதால் ஆடி மாதம் முழுவதும் தன்னம்பிக்கை, மன தைரியம் குறையும். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றொரு வேலை கிடைக்கும் வரை தற்போது இருக்கும் வேலையை விட வேண்டாம். சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கையிருப்பு, கடன் வாங்கி முதலீடு செய்யும் எண்ணத்தை ஒரு மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். சிலர் ஆன்மிக சுற்றுலா செல்லும் வாய்ப்பு அமையும். மீடியா மற்றும் கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். 7ல் சனிபகவான் இருந்து ராசியை பார்ப்பதால் திருமண உறவில் பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கன்னி : புத்தி கூர்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 12ல் செவ்வாய் உடன் சேர்ந்து இருப்பதால் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரர்கள், நண்பர்கள் வழியில் நேர விரையம், பண விரையம் உண்டாகும். உங்கள் சம்பாத்தியம் மட்டுமின்றி வாழ்க்கை துணையின் சம்பாத்தியமும் சேர்த்து செலவாகும் சூழல் உருவாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கு திசையில் உள்ள நாடுகளுக்கு சென்று வருவீர்கள். கன்னி ராசியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியில் தடை ஏற்படும். வார்த்தையின் வீரியத்தை அறிந்து பேசுவது நல்லது. ஒரே விஷயத்தை மாற்றி மாற்றி பேசுவதை தவிர்த்து விடுங்கள். 7, 8, 9 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!

துலாம் : வியாபாரத்தில் அதீத ஆர்வம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் 10ல் இருப்பதால் சொந்த தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. அழகு நிலையம், எலக்ட்ரானிக் பொருட்கள், கண்ணாடி விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தந்தை செய்த தொழில் செய்பவர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ராசியில் கேது இருப்பதால் ஆன்மிக சிந்தனை, ஆன்மிக தலைவர்களின் அறிமுகம் கிடைக்கும். 9ந்தேதி பிற்பகல் தொடங்கி 10, 11ந்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் சமூகத்தில் அறிமுகமாகும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். மூத்த சகோதரர்கள் வழியில் ஆதாயமும் உண்டு, செலவுகளும் ஏற்படும். கம்யூட்டர், செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள்.

விருச்சிகம் : விரோத குணம் சற்று அதிகம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் 10ல் இருப்பதும், குரு பார்வை பெறுவதும் சிறப்பு என்றாலும் புதன் உடன் இணைந்து இருப்பதால் செல்போனில் பேசும் கவனமாக இருங்கள். 7, 8 , 9 ஆகிய தேதிகளில் ஃபேஸ்புக், ட்விட்டரில் கருத்துக்கள் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது. எதையாவது பகிர்ந்து விட்டு அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதால் ஜாக்கிரதையாக இருங்கள். 10, 11 ஆகிய தேதிகளில் பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டு. நீண்ட இழுபறிக்கு பிறகு தந்தையின் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். கட்டளை போடுவதை போல் பேசுவதை தவிர்த்து விடுங்கள். பழைய வாகனங்கள், வீடு போன்றவற்றால் லாபம் உண்டு. 12, 13 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். ஆராய்ச்சி படிப்பை தொடர்வதில் சிக்கல் உண்டாகும்.

Also Read : குக்கீஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய், கேன்சர் வரக்கூடும்! எச்சரிக்கும் ஆய்வு ரிப்போர்ட்!

தனுசு : தெய்வ நம்பிக்கை கொண்ட தனுசு ராசிக்காரர்களே, பாக்கியாதிபதி சூரியன் 8ல் இருப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதாலும் அரசு சார்ந்த விஷயங்கள், பூர்வீகத்தில் தடை, பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் குரு பகவான் ராசியை பார்ப்பதால் சிறப்பு. மலையளவு பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மனைவி, மாமனார் வழியில் மனக்கசப்புகள் ஏற்படும். இளைஞர்கள் போலியான அன்பு, காதலால் ஏமாற்றப்படும் நிலை உண்டாகும். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து செயல்பட வேண்டிய வாரம். உடலில் சர்க்கரை அளவு கூடும் என்பதால் உடல் நலனில் அக்கறையுடன் இருங்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உணவு தொடர்பான படிப்பு மீது ஆர்வம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் கவனமாக இருங்கள்.

மகரம் : யாரையும் எளிதில் நம்பாத மகர ராசிக்காரர்களே, சூரியனும், சுக்கிரனும் ராசியை பார்ப்பதால் மனைவியின் ஆளுமை திறன் வெளிப்படும். தந்தை, அத்தை வழியில் நன்மைகள் கிடைக்கும். தந்தையை அனுசரித்து செல்லுங்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் கூட கைக்கு வருவதில் ஆயிரம் சிக்கல்கள் வருகிறதே என்று வருத்தப்படுவீர்கள். 12, 13 ஆகிய தேதிகளில் வாழ்க்கை துணையின் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்ய நேரிடும். வேலை செய்யும் இடத்தில் கணினி போன்ற எலக்ட்ரான் பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். மின்சார வாரிய பணியாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. சந்திராஷ்டமம் இல்லை என்பதால், கூட்டு தொழில் சார்ந்த முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம்.

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்!

கும்பம் : முன்னுக்கு பின் முரணாக பேசும் கும்ப ராசிக்காரர்களே, ராசிநாதன் சனிபகவான் ராசியில் ஆட்சியாக இருப்பதும், உபஜெய ஸ்தானமான 6ல் சூரியன் இருப்பதும் சிறப்பு என்றாலும் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியும் வரை வெற்றி, குதிரைக் கொம்பாக இருக்கும். துணிந்து கடுமையாக முயற்சி செய்தால் சாதனைகளை படைக்கலாம் என்பதை புரிந்து செயல்படுங்கள். வருவாய் துறை, விஏஓ வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. முன் கோபம், பழிவாங்கும் எண்ணத்தை மாற்றி கொள்வது நல்லது. நீர், வெள்ளை நிற பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரியான நேரத்தில் தாயார் பண உதவி செய்வார்கள். மனைவி உடன் வீண் வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையின் இளைய சகோதர உறவால் மனக்கசப்புகள் ஏற்படும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

மீனம் : வெகுளித்தனம் கொண்ட மீன ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும் வாரம் இது. பங்குச்சந்தை, ஒப்பந்தங்கள் வழியில் சிக்கல்கள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சைபர் கிரைம் பிரிவில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. நீங்கள் பணிபுரியும் துறையில் உங்களது புத்தி கூர்மையை அடுத்தவர்கள் கண்டு அசந்து போவார்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்ப பொறுப்புகளை தலையில் சுமக்க வேண்டிய சூழல் உண்டாகும். பூர்வீக சொத்து, தந்தை வழி உறவினர்கள் வழியில் விரையங்கள் வந்து சேரும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்பதால், பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவுகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.

தொடர்புக்கு : ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry