‘வைக்கமும் கேரளமும்’ என்ற தலைப்பில், வாசகர் ஒருவருக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மையுடன், வைக்கம் போராட்டம் ஈ.வெ.ரா தொடங்கி நடத்தி வென்றது என்று, இங்கே எல்லா இடங்களிலும் எழுதி வைத்தவர்களே, இன்று அது காந்தியப்போராட்டம் என்றும், அதில் வேறு பல தலைவர்களும் பங்கெடுத்தார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்திருப்பதன் வெற்றியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வரலாற்றுப்பக்கமாக அவர்கள் நகர்ந்தார்கள் என்றால் நமக்கு என்ன பிரச்சினை?
ஆனால் கேரளத்தில் வைக்கம் போராட்டத்தை ஒட்டி நிகழ்வனவற்றைக் கண்டால் நாராயணகுரு பிறந்த மண்ணா என்னும் சலிப்பு உருவாகிறது. சாதியரசியல் இந்தியாவை ஒட்டுமொத்தமாக எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று தெரிகிறது.
வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் மாணவரான டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஈழவர்கள் வைக்கத்தில் நடத்திய ஒரு ஆலயநுழைவுப் போராட்டம், திவான் வேலுப்பிள்ளையால் கொடுமையாக ஒடுக்கப்பட்டமையே டி.கே.மாதவனின் முன்னெடுப்புக்குக் காரணம். டி.கே.மாதவனுக்கு நாராயணகுரு ஆதரவளிக்கவில்லை. எதிர்ப்புப் போராட்டங்கள் அவருடைய வழி அல்ல.
காங்கிரஸ்காரரான டி.கே.மாதவன், அன்னிபெசண்டை உள்ளே கொண்டுவர முயன்றார். அது போதிய அளவு வெற்றிபெறவில்லை. அதன்பின் காந்தியை உள்ளே கொண்டுவருவதில் அவர் வெற்றிபெற்றார். கேரள காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான கேளப்பன், கே.பி.கேசவமேனன் ஆகியோரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
அன்றைய இளம் காங்கிரஸ் தலைவர்களான, பிற்கால கம்யூனிஸ்டுக் கட்சியினரான இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த சி.வி.குஞ்ஞிராமன் அதன் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்தப் போராட்டத்தின் விளைவாக தேசாபிமானி, கேரளகௌமுதி ஆகிய நாளிதழ்கள் உருவாயின.
இப்போராட்டத்தில் ஐயன்காளியின் இயக்கம் பங்கெடுத்தது. ஈ.வெ.ராவும், கோவை அய்யாமுத்து போன்ற தமிழகத் தலைவர்களும் பங்கெடுத்துச் சிறைசென்றனர். கர்நாடகத்தில் இருந்தும் காங்கிரஸ் போராளிகள் வந்து கலந்துகொண்டனர்.
இப்போராட்டம் இந்துக்களிடையே பிளவை உருவாக்கிவிடலாகாது என்பதில் காந்தி மிகக் கவனமாக இருந்தார். அது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடமளித்துவிடும், இந்தியா முழுக்க அந்தக் கசப்பை அவர்கள் பரப்பி தேசிய இயக்கத்தை அழித்துவிடுவார்கள் என அஞ்சினார். பிரிட்டிஷ் ஆங்கில நாளிதழ்கள் அவ்வாறுதான் நடந்துகொள்ளவும் செய்தன.
காந்தியின் வழிகாட்டலின்படி ஆலயநுழைவுப் போராட்டம் ஒவ்வொருநாளும் விடாப்பிடியாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கைதாகும் போராளிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், ஒருவர் ஈழவர், ஒருவர் உயர்சாதியினர் என இருக்கவேண்டும் என காந்தி ஆணையிட்டிருந்தார். ஆகவே பிரித்தாளும் முயற்சிகள் வெல்லவில்லை. வன்முறை உருவாகவே கூடாது என்ற பிடிவாதம் காந்திக்கு இருந்தது. அரசுத்தரப்பில் கும்பல் வன்முறையை தூண்டிவிட எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.
Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!
இந்தப் போராட்டத்தின்போது ஆலய நுழைவு மறுக்கப்பட்டவர்கள் மதம் மாறலாம் என சி.வி.குஞ்ஞிராமன் அறிவித்தார். சிலர் மதம் மாறினர். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் மதமாற்றத்துக்கு அழைப்பு விடுத்தனர். உடனே உயர்சாதித் தரப்பு, இந்த மொத்தப் போராட்டமே மதமாற்ற சக்திகள் நடத்துவதுதான் என பிரச்சாரம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை விலகிக் கொள்ளும்படி காந்தி அறிவித்தார். ஈ.வெ.ரா. அந்த ஆணையை எதிர்த்தார். ஆனால் ஜார்ஜ் ஜோசப் காந்தியின் ஆணைப்படி மதுரை உட்பட்ட இடங்களில் தலித் கல்விக்கான பணிகளில் ஈடுபட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போராட்டத்தில், நடுவே சிலகாலம் மட்டுமே ஈ.வெ.ரா கலந்துகொண்டார். சிறைசென்றார். அதன்பின் அவர் தமிழகம் திரும்பி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். வைக்கம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இடதுசாரித் தலைவர்களும் அதில் நம்பிக்கை இழந்து விலகிச் சென்றனர். அவர்கள் சத்யாக்கிரக வழிகளை ஏற்கவில்லை, வன்முறைப்பாதையை நம்பினர்.
காந்தி இரண்டுமுறை கேரளம் வந்து நாராயணகுரு உள்ளிட்டோரைக் கண்டு பேசினார். பழமைவாதிகளின் தலைவரான இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடை வீட்டில் சென்று சந்திக்க முயன்றாலும் அவர் சந்திக்க ஒப்பவில்லை. ஆலயப்பிரவேசத்தை எதிர்த்த சந்திரசேகர சரஸ்வதியிடமும் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் நீண்டகாலம் நடைபெற்ற வைக்கம் போராட்டம் உயர்சாதியினரில் கணிசமானோர் மனதை மாற்றியது. பழமைவாதிகள் தனிமைப்பட்டனர். காந்தியின் கோரிக்கையின்படி நாயர் சர்வீஸ் சொசைட்டி நிறுவனர் மன்னத்து பத்மநாபன் வடகேரளத்தில் இருந்து வைக்கத்திற்கு ஒரு நீண்ட நடைபயணம் நடத்தினார். நாராயணகுருவை கண்டு வணங்கி வைக்கம் சென்றார். நாராயணகுருவும் போராட்டத்திற்கு வந்தார்.
வைக்கம் போராட்டம் பெரும் மக்களியக்கமாக ஆனது இந்த இரு தலைவர்களும் உள்ளே வந்தபின்னர்தான். இருவரும் அன்று நாயர், ஈழவர் தரப்பினரால் தெய்வத்திற்கு நிகராக வணங்கப்பட்டவர்கள். பல்லாயிரம் பேர் பங்கெடுக்கும் பெரும் போராட்டமாக வைக்கம் சத்தியாக்கிரகம் அவர்கள் வந்தபின் மாறியது.
அத்துடன் திருவிதாங்கூரின் காவல்துறை தலைவராக இருந்த பிட்ஸ் துரைக்கு காந்தி கடிதமெழுதி, அரசாங்க வன்முறைக்கு துணைபோகக்கூடாது என கோரினார். விளைவாக பிட்ஸ் துரை போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். அதற்குரிய படைபலம் திருவிதாங்கூருக்கு இல்லை என்றும், அது அறமல்ல என்றும் மன்னரிடம் தெரிவித்தார்.
வைக்கம் போருக்கு பொதுவாக மொத்தக் கேரளச மூகமும் ஆதரவளித்தது. எதிர்த்தரப்பில் இறுதியில் மிகச்சிலரே எஞ்சினர். விளைவாக திருவிதாங்கூர் அரசு பணிந்தது. வைக்கம் ஆலயத்தில் அனைவரும் நுழைய அனுமதி அளித்தது. (தாந்த்ரீகச் சடங்குகள் நிகழும் மைய வாசலுக்கு மட்டும் விதிவிலக்கு தேவை என தந்த்ரிகள் கேட்டதை போராட்டத் தரப்பு ஏற்றுக்கொண்டது) ஆலயநுழைவு ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தி கையெழுத்திட்டார். மன்னர் ஆலயநுழைவை அறிவித்தார்.
வைக்கம் போராட்டம் வென்றதும் அதே பாணியில் இந்தியா முழுக்க ஆலயநுழைவுக்கான காந்தியப்போராட்டத்தை காந்தி தொடங்கினார். அனந்தபத்மநாபசாமி ஆலயம், குருவாயூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆலயநுழைவுப்போர் தொடங்கியது. டி.கே.மாதவன் திருவார்ப்பு ஆலயத்தில் ஆலயநுழைவுப் போரை தொடங்கினார்.
Also Read: சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!
இது உண்மை வரலாறு. ஆனால் வைக்கம் நூற்றாண்டு நிகழும் போது நாம் கேரளத்தில் காண்பது ஒரு சோக வரலாற்றை. மாத்ருபூமி நாளிதழ் உள்ளிட்ட இதழ்கள் வைக்கம் என்பது முழுக்கமுழுக்க மன்னத்து பத்மநாபன் போராடி வென்ற போராட்டமாக சித்தரிக்கிறார்கள். ஈழவ இதழ்களில் மன்னத்து பத்மநாபன் பெயரே இல்லை. முழுக்க முழுக்க நாராயணகுரு நடத்திய போராக அதை காட்டுகிறார்கள்.
நாராயணகுருவின் ‘ஆணைப்படி’ அதை காந்தி நடத்தினார் என்கிறார்கள் சிலர். காங்கிரஸ் இதழ்களில் கேளப்பன், கேசவமேனன் ஆகியோரின் முகங்களே உள்ளன. போராட்டத்தில் ஏ.கே.கோபாலனும் ஈ.எம்.எஸும் அளித்த பங்கே இல்லை. கேரள இடதுசாரி அரசு, அது இடதுசாரித் தலைவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம் என சொல்ல விரும்புகிறது. காந்தியை எதிர்த்தவர்களான ஈ.வெ.ராவையும், ஜார்ஜ் ஜோசப்பையும் சேர்த்துக்கொள்கிறது.
ஆனால் கேரளத்தில் பொதுவாக வைக்கம் வெற்றி என்பது மன்னத்து பத்மநாபனின் சாதனை, அல்லது நாராயணகுருவின் சாதனை என்ற குரலே இன்று ஓங்கிக் கேட்கிறது. ஏனென்றால் நாயர்களும் ஈழவர்களுமே இன்று அங்கே பெரிய சாதிகள். அவர்கள் இருவரும் கடைசியாகத்தான் வந்து சேர்ந்தார்கள், ஓராண்டு முன்புகூட மன்னத்து பத்மநாபன் எதிர்மனநிலை கொண்டிருந்தார், நாராயணகுரு போராட்டம் பற்றி ஐயம்கொண்டிருந்தார் என ஒருவரிடம் சொன்னேன். அவர் என்னை அடிக்காத குறை.
Recommended Video
4 வர்ணங்கள் பற்றிய உண்மை விளக்கம் | மனுதர்மத்தை வைத்து ஏமாற்று அரசியல் | Aravind Subramaniyam
அண்மையில் ஒருவர், இண்டன் துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடுதான் வைக்கம் போராட்டத்தின் தலைவர், உண்மையான வைக்கம் வீரர் என்று ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டு துணுக்குற்றேன். நல்லவேளை, பகடிதான் செய்கிறார் என பத்து நிமிடம் கழித்தே புரிந்தது. வைக்கத்தின் உண்மையான வரலாற்றை, முழுமையான சித்திரத்தை, தமிழில் சொல்வதைவிட மலையாளத்தில் சொல்வது மேலும் சிரமம் என்னும் நிலை இன்று உள்ளது. சொல்ல ஆரம்பித்தாலே நீ யார், நாயரா, ஈழவரா, காங்கிரஸா, கம்யூனிஸ்டா என்று கேட்பார்கள். அவ்வளவு மூர்க்கம். முழு உண்மை எவருக்குமே தேவையில்லை.
வரலாறென்பதே இப்படித்தான் உருவாகிறது போலும். சமகாலத்தில் எவருக்கு அதிகாரம் உள்ளதோ அவர்களே வரலாற்று நாயகர்கள்”. இவ்வாறு ஜெயமோகன் பதில் அளித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry