சென்னையில் தியாகராய நகரில், ‘அறம் இணைய இதழ்’ சார்பில் 27.04.2023 அன்று “திசை மாறுகிறதா திமுக அரசு?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘அறம் இணைய இதழ்’ ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன், ஐக்கிய விவசாய முன்னணி நிர்வாகி கே. பாலகிருஷ்ணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மு. வெற்றிச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன், தொழிலாளர்களின் 12 மணி வேலை நேர சட்டத் திருத்தம், நில ஒருங்கிணைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “2024 ஜனவரியில் சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என உலக தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எல்லோரும் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு கதவுகளை திறந்து வைத்திருக்கிறோம், தொழிலாளர்களை சுத்தமாக மொட்டை அடிக்கலாம் வாருங்கள் என்று அவர் அழைக்கிறார். நில ஒருங்கிணைப்புச் சட்டம், ஒரு சட்டமா? நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க அரசாங்கம் கைக்கூலி வேலை செய்கிறது. நாங்கள் சட்டத்தை திருத்திவிட்டோம் என முதலீட்டாளர்களுக்கு அரசு அனுப்பிவைக்கும்.
100 ஹெக்டேர், சற்றேறக்குறைய 250 ஏக்கர் வைத்திருந்தால் போதும். அரசு அனுமதி தந்துவிடும். 50 ஏக்கர் இருந்தால் போதும், எஞ்சிய 200 ஏக்கரை நாங்கள் தருகிறோம், நீர் நிலைகளை தருகிறோம் என்று சொல்லுவார்கள்.
தொழிலாளர்களை, கட்டமைப்புகளை, நீர்நிலைகளை என என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விவசாயத்தைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொடுத்துவிடுவார்கள். இதுதான் அரசு முதலீட்டாளர்களுக்குச் சொல்லும் அடிப்படை செய்தி. இதற்காகத்தான் இந்தச் சட்டம். இது காந்தி தேசம் இல்லை, காவி தேசம், காவி தேசத்தில் கார்ப்பரேட் இல்லாமல் வேறு என்ன இருக்கும்? இவர்கள் காவியைப் பார்த்து காப்பி அடிக்கிறார்கள்.
தொழிலாளர்கள் சட்டத் திருத்தம் பற்றி இந்த அரசாங்கம் கூறும் நோக்கத்தைப் பார்த்தால், இது மக்கள் நலனுக்கான அரசாங்கமா? திராவிட மாடல் அரசா? என்ற கேள்வி எழுகிறது. வெட்கமாக இருக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் அசோசியேஷன் கேட்டதால் ரீஃபார்ம் எனப்படும் சீர்திருத்தம் செய்கிறார்களாம். வேலை நேர சீரமைப்பு என்கிறார்கள். ரீஃபார்ம் என்பதே ஏமாற்றுதான்.
கொரோனா வந்தபோது குஜராத் மாநில அரசு 20.04.2020ல் ஃபேக்டரீஸ் ஆக்ட்டில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டது. இது முதலாளிகளுக்காக செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் மஸ்தூர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது. இதே சட்டத்தைத்தான் தமிழ்நாடு அரசு தற்போது கொண்டு வருகிறது. குஜராத்தில் கொரோனா காலத்திற்காக அரசாணை போட்டார்கள், இங்கு எல்லா காலத்திற்கும் போடுகிறார்கள், காவிதான் உங்களுக்கு முன்னுதாரணமா?
அரசாங்கம் சொல்லும் நிறுவனங்களுக்கு, சட்டப்பிரிவுகள் 65A, 64, 65, மற்றும் 51,52,54,55,56,59 ஆகிய செக்ஷன்கள் பொருந்தாது. இந்தச் சட்டப்படி 12 மணி நேர வேலை என்று எல்லோரும் தவறாக சொல்கிறார்கள். சட்டப்படி அது 13 மணி நேரமாகவும், 14 மணி நேரமாகவும் ஆகலாம்.
Also Read : காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! பிணையே கிடைக்காது! தனிமனித உரிமைகளை மீறும் சட்டத்திருத்தம்!
இந்தச் சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்யவில்லை. அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கொடுத்த அழுத்தத்தால்தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மோடி ஃபார்முலாப்படியே, இந்தச் சட்டத்தின் வரைவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்காமல், கடந்த 21ந் தேதி விவாதமின்றி நிறைவேற்றி இருக்கிறார்கள்.
தமிழக அரசு திசை மாறுகிறது, திசை மாற வேண்டாம் என எச்சரிக்கிறோம். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. பாசிச அபாயம், காவி பயங்கரவாதம் என்பவற்றின் பெயரால், தமிழ்நாடு அரசே அந்த வேலையைச் செய்கிறதே? காவி சொல்வதை நீங்கள் செய்தால் எப்படி? தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், மோடியை புறக்கணிக்கவில்லையா? நீங்கள் ஏன் அதைப்போல் செய்வதில்லை? தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்வது?, அரசா? ஆளுநரா?
அரசு திசை மாறுகிறது என்பதற்கு சில சம்பவங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் அந்தக் காவலர்களை காப்பாற்றுகிறீர்கள்? கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணனை ஏன் கைது செய்தீர்கள்? தலித் சகோதரர்களை கைது செய்து அவர்களது வாழ்வை ஏன் பாழாக்கினீர்கள்?
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று எஸ்பிஐ வங்கி தேர்வு நடக்கும் என அறிவித்தது. அதை எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் மூவர் சென்னையில் எஸ்பிஐ அலுவலகத்திற்கு சென்று போராட்டம் நடத்தினார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிவிட்டதாகவும், போராட்டத்தைக் கைவிடுமாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த எம்.பி.க்களிடம் கூறினார். அதையேற்று அவர்களும் போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆனால், 15000 மாணவர்கள் பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு எழுதினார்கள். இதை நிறுத்தக்கூட முதலமைச்சரால் முடியவில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தொடர்பான வழக்கிலும் தமிழக அரசுக்கு பின்னடைவுதான். நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அண்மையில் இரண்டு பேரின் நியமனத்தை ரத்து செய்தார். ஆகஸ்ட் 2022 பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யாததே இதற்குக் காரணம். திராவிட மாடல் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டாமா?
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழில் குடமுழுக்கு நடக்காது என்று சேகர்பாபு உறுதியாகச் சொல்கிறார். நாங்கள் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை, தமிழிலும் நடத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். இதை அரசால் சரிசெய்ய முடியாதா?
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. இதை வைத்துத்தான் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் பேரணி நடத்த அனுமதி பெற்றார்கள். நீண்ட வருடங்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுவிக்க அரசு ஏன் பயப்படுகிறது? பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்து உத்தரவிட்டதே.
வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலினத்தவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா? சென்னையில் மெரினா லூப் சாலையில் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்துகிறீர்கள், நிலக்கரி சுரங்கம் அமைக்கிறீர்கள். பலரது பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர். போட்டும் இன்னும் கைது செய்யவில்லை. 326வது பிரிவில் வழக்கு பதிந்தால் உடனடியாக கைது செய்ய வேண்டாமா? தமிழக அரசு மாறக்கூடாது, மாறினால் நிச்சயமாக நாங்கள் உங்களை மாற்றுவோம். நீங்கள் மக்களுக்கு ஆதரவாக இருந்தால்தான் திராவிட மாடல் அரசு. திசை மாறாதீர்கள்”. இவ்வாறு ஹரிபரந்தாமன் பேசினார்.
Recommended Video
நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry