டெல்லி எல்லையில், போராட்ட களத்தில் விவசாயிகள் உறுதியாய் இருக்க, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண்துறையில் இறங்கியிருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை அச்சம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.
இதை அதிகரிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் தாலுகாவில் ரிலையன்ஸ் நிறுவனம் நெல் கொள்முதல் செய்கிறது. ஸ்வஸ்திய விவசாயிகள் கூட்டமைப்பில் உள்ள 1,100 விவசாயிகளிடம் ரிலையன்ஸ் நிறுவன முகர்வர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,868 என அரசு நிர்ணயித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1,950-க்கு எடுத்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது விலை அதிகமாக இருந்தாலும், இது நீடிக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், வேளாண் துறையில் கால்பதிக்கும் திட்டம் இல்லை என்று பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியிருந்தது.
இதுஒருபுறிமிருக்க, அதானி நிறுவனமும் வேளாண் துறையில் பாய்ச்சல் காட்டுகிறது. Adani Agri Fresh Limited-ன் Farm Pik நிறுவனம் ஆப்பிள் விவசாயத்தில் அழுந்தக் கால்பதித்துள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகே, அதானி குழுமம் ஆப்பிள் விவசாயம் மட்டுமின்றி வேளாண் சந்தையில் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் Farm Pik நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் பொருட்களை வாங்கி விற்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த 15,000 விவசாயிகளிடம் இருந்து ஆப்பிள் வாங்கி விற்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், விவசாயிகள் மத்தியில் இது அச்சத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, “வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை?
இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? சிலர் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது? வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.
Previous Post: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து பற்றிய பரபரப்பு தகவல்! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry