மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive

0
333

மது குடிப்பதற்கு முன் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆல்கஹால் தொடர்புடைய சில பாதகமான விளைவுகளை குறைக்க இயலும். மாறாக, சில உணவுகள் வயிறு உப்புசம், நீரிழப்பு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்

1. முட்டை

முட்டைகள் அதிக சத்தானவை. ஒரு முட்டை 6 கிராம் புரதம் நிறைந்தவை. மது அருந்துவதற்கு முன் முட்டை போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது, வயிறு விரைவாக காலியாவதைத் தடுப்பதுடன், ஆல்கஹால் உறிஞ்சப்படுவதைத் தாமதப்படுத்த உதவும்.

புரோட்டீன் என்பது மேக்ரோநியூட்ரியண்ட் அதிகம் உள்ளது. இது நீண்ட நேரம் வயிறை முழுமையாக  வைக்கும். பொதுவாக, ஆல்கஹால் பசியை அதிகரிக்கும், எனவே இரவு நேரத்தில் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதால் அதிகம் சாப்பிடுவதை முட்டை குறைக்கும். சத்தான, நார்ச்சத்து நிறைந்த ஆம்லெட்டுக்காக, விரும்பும் காய்கறிகளோடு சேர்ந்து, விரும்பும் விதமாக முட்டைகளை சாப்பிடலாம்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

2. ஓட்ஸ்

1/2-கப் (40-கிராம்) சமைக்கப்படாத ஓட்ஸில், கிட்டத்தட்ட 5 கிராம் புரதம் மற்றும் 4 கிராம் நார்ச்சத்து, மேலும் போதுமான அளவு மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்புச் சத்தும் கிடைக்கிறது.

நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் ஓட்ஸ், வயிற்றை முழுமையான அதாவது வயிறு நிறைந்துள்ளது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மது குடிப்பதன் அளவு குறைவதால், மதுவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறைகிறது.

கல்லீரல் செயல்பாட்டை ஓட்ஸ் மேம்படுத்துவதன் மூலம், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது பயனளிக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரல் சேதமாவதிலிருந்து இது ஓரளவு பாதுகாக்கிறது.

3. வாழைப்பழம்

ஒரு பெரிய பழத்திற்கு 4 கிராம் நார்ச்சத்து உள்ளதால், வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவும் ஒரு சிறந்த சிறிய சிற்றுண்டியாகும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது மது அருந்துவதுடன் தொடர்புடைய எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கலாம். கிட்டத்தட்ட 75% தண்ணீரால் ஆனவை என்பதால், வாழைப்பழம் உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்க உதவும். வாழைப்பழங்கள் ஆரோக்கியமான, வசதியான சிற்றுண்டியாகும். வேர்க்கடலை வெண்ணெய், பழச் சாலடுகள், ஓட்மீல் உள்ளிட்டவைகளுடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

Also Read : ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

4. சால்மன் ரக மீன்

ஒமேகா-3 கொழுப்பின் மிகச் சிறந்த ஆதாரங்களில் சால்மன் ஒன்றாகும். இது ஆரோக்கிய மற்றும் அத்தியாவசிய கொழுப்பு ஆகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மதுவின் சில தீங்கான விளைவுகளை குறைக்க உதவும் என்று சில  ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக குடிப்பதால் மூளையில் ஏற்படும் அழற்சியும் இதில் அடங்கும். சால்மனில் புரதமும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 3-அவுன்ஸ் அல்லது 85-கிராம் சமைத்த சால்மனில் 22 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது. இது ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவும்.

5. தயிர் (யோகர்ட்)

புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை யோகர்ட் வழங்குகிறது. இரவு மது குடிப்பதற்கு முன் உண்ணக்கூடிய சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

இது மெதுவாக ஜீரணிக்கப்படுகிறது. ஆல்கஹால் உறிஞ்சுதலை குறைப்பதன் மூலம், உடலில் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகளை குறைக்கலாம். ஆல்கஹாலினால் தூண்டப்படும் பசியைத்  தடுக்கவும், இரவு முழுவதும் வயிற்றை முழுமையாக வைத்திருக்கவும் இது உதவும்.

6. சியா விதைகள்

சியா விதைகள், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். அத்துடன் மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்களும் இதில் இருக்கிறது.
குறிப்பாக, நார்ச்சத்து வயிறு விரைவில் காலியாவதைத் தாமதப்படுத்தும், இரத்தத்தில் ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கவும் இது உதவும்.

சியா விதைகளில் ரோஸ்மரினிக் அமிலம், கேலிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் செல்கள் சேதத்தைத் தடுக்கவும், கல்லீரலைப் பாதுகாக்கவும் உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

7. பெர்ரி பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து, மாங்கனீஸ்,  வைட்டமின்கள் சி மற்றும் கே உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இது உதவுகிறது, ஆல்கஹால் விளைவுகளை குறைக்கிறது மற்றும் நீரிழப்பைத் தடுக்கிறது. பெர்ரி போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உண்பதால்,  ஆல்கஹாலினால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கலாம்.

8. தண்ணீர்விட்டான் கிழங்கு

முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ள தண்ணீர்விட்டான் கிழங்கு கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. அதிகப்படியான மது அருந்துவதால் செல்களில் ஏற்படும் சேதத்தை இது தடுக்கிறது.

9. திராட்சைப் பழம்

திராட்சை ஒரு சுவையான சிட்ரஸ் பழமாகும். இதில், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. இதிலுள்ள நரிங்கெனின் மற்றும் நரிங்கின் ஆகிய இரண்டு ஆன்ட்டி ஆக்சிடென்ட் சேர்மங்கள் கல்லீரல் பாதிப்பைத் தடுக்கின்றன. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் கொழுப்பை இது குறைக்கிறது.

Also Read: அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

10. தர்பூசணி, முலாம் பழம்

முலாம்பழம் தண்ணீர் சத்து நிறைந்தது, மது குடிக்கும் போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும்.
தர்பூசணி தோராயமாக 91% தண்ணீரால் ஆனது, முலாம் பழம் சுமார் 90% தண்ணீர் கொண்டது.

இந்தப் பழங்களில் பொட்டாசியம் போன்ற முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. அவை அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் மயக்கத்தை குறைந்துவிடும்.

11. அவகேடோ

அவகேடோ எனப்படும் வெண்ணெய் பழங்களில் பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. மது குடிப்பதற்கு முன் உண்ணக்கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அவகேடோவில் நிறைந்துள்ளன.  புரதம் அல்லது கார்போஹைட்ரேட்டுகளை விட கொழுப்பு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது இரத்தத்தில் ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவும்.

12. திணை அரிசி

திணை அரிசி, புரதம், நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த முழு தானியமாகும். இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க இவை இரண்டும் உதவுகிறது.

க்வெர்செடின், ஃபெருலிக் அமிலம், கேடசின் மற்றும் கேம்ப்ஃபெரால் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளின் கட்டமைப்பிலிருந்து திணை அரிசி பாதுகாக்கிறது.

Also Read : சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?

13. பீட்ரூட்

ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ள பீட்ரூட், தனது நிறத்தால் கவனம் ஈர்க்கக் கூடியதாக உள்ளது. பீட்ரூட் சாறு கல்லீரல் செல்களை பாதுகாப்பதுடன், செல்கள் சேதமாவதைத் தவிர்க்கிறது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை குறைக்க இது உதவும்.

14. சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மது குடிக்கும் போது எலக்ட்ரோலைட் அளவை சமப்படுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவுகிறது. பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக மட்டுமல்லாமல், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளும் இதில் அதிகம் உள்ளன. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் பெரிய மூலக்கூறுகளால் ஆனவை என்பதால் அவைகளை உடைக்க அதிக நேரம் எடுக்கும். எனவே உடலில் ஆல்கஹால் விளைவுகளை இது குறைக்கும்.
வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதால், பசி குறையும் மற்றும் குடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான பசியைத் தடுக்கும்.

15. உலர்பழங்கள் & நட்ஸ்களின் கலவை

மது குடிப்பதற்கு முன்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவாகும். பாதாம், அக்ரூட் பருப்புகள், பூசணி மற்றும் ஆளி விதைகள், உலர் பழங்கள் அனைத்திலும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது மதுவின் மோசமான விளைவுகளை குறைப்பதுடன், வயிறு விரைவில் காலியாவதை தடுக்க உதவும். மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்து இருப்பதால், மது குடிப்பதால் ஏற்படும் எலக்ட்ரோலைட் தொந்தரவுகளைத் தடுக்க இது உதவும்.

Also Read : அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?

மது அருந்துவதற்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மது அருந்துவதற்கு முன் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயின் (GERD) அறிகுறிகளை ஆல்கஹால் தூண்டலாம். இதனால் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் ஏப்பம் ஆகியவை ஏற்படும். GERD பிரச்சனை அல்லது அஜீரணக் கோளாறுகள் இருந்தால், காரமான உணவுகள், சாக்லேட், கார்போனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

மதுகுடிக்கும்போது, உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரீட்ஸெல்ஸ் மற்றும் க்ராக்கர்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வெள்ளை ரொட்டி, பாஸ்தா, இனிப்புகள் மற்றும் சோடாக்கள் போன்ற சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

Recommended Video

தலைக்கு ஏறிய போதையை இறக்குவது எப்படி?| கள் குடிக்கலாமா?| Alcohol Addiction Treatment

இந்த உணவுகள் மற்றும் பானங்கள் விரைவாக ஜீரணிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம். இரவில் அதிகமாக சாப்பிடத் தூண்டும். நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க இரவில் அவ்வப்போது தண்ணீரை பருகி வந்தால், ஹேங்க் ஓவர் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Source : healthline.com

மது, மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது. மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மதுக்கடை இருக்கும் பகுதியின் 1 கி.மீ. சுற்றளவில் 70% பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக மகசூல் டிரஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. மது நோயாளிகள் அதிமுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மதுவினால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கிறார்.

தினமும் மது குடித்தாலும், வாரம் ஒரு முறை குடித்தாலும், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. எனவே மதுப்பழகத்திற்கு ஆட்படாமல், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து பழகுவோம். மதுவுக்கு அடிமையானவர்கள் அரசு போதை மறுவாழ்வு மையங்களை அணுகலாம். மத்திய அரசின் மறுவாழ்வு மைய கட்டணமில்லா தொடர்பு எண் – 1800 599 0019.

Disclaimer : மதுப்பிரியர்களை ஊக்குவிப்பதற்கான கட்டுரை அல்ல இது. மதுவால் ஏற்படும் உடல் சீரழிவை குறைப்பதற்கான யுத்தியாகவேதான் இந்தக் கட்டுரையை வேல்ஸ் மீடியா பிரசுரிக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry